பிரதமர் அலுவலகம்
கொச்சியில் துவக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம் கேரளாவுக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது: பிரதமர்
கொச்சியில் உள்ள ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க வளாகம் மற்றும் எல்.பி.ஜி. நிரப்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்பு கலனையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பி.பி.சி.எல் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
Posted On:
27 JAN 2019 6:50PM by PIB Chennai
கேரளாவில் உள்ள கொச்சிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல்லும் நாட்டினார்.
அவர் நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்களில், ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்ட வளாகமும் (ஐ.ஆர்.ஈ.பி) ஒன்றாகும். ஐ.ஆர்.ஈ.பி ஒரு நவீன விரிவாக்க வளாகமாகும். இது கொச்சியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமாக மாற்றியமைக்கும். இந்தியாவில் தூய்மையான எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த மையம் அமைந்துள்ளது. எல்.பி.ஜி மற்றும் டீசல் உற்பத்தியை இருமடங்காக உயர்த்தி இம்மையத்தில் அமைக்கப்பட உள்ள பெட்ரோ கெமிக்கல் திட்டத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இது உற்பத்தி செய்யும்.
ஐ.ஆர்.ஈ.பி வளாகத்தை துவக்கிவைத்த பிரதமர், “கேரளாவின் மிகப்பெரிய தொழில் கூடம் தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ள இந்த தினம், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இந்தத் தருணம் கேரளாவிற்கு மட்டுமின்றி, நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது” என்று பிரதமர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் தூய்மையான எரிசக்தியை மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் கொச்சினில் உள்ள பாரத் பெட்ரோலியம் கழகம் ஆற்றிய பங்கை பிரதமர் பாராட்டினார்.
அரசின் சாதனைகள் குறித்து பேசிய பிரதமர், மே, 2016 முதல் உஜ்வாலா திட்டம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும், மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு சுமார் ஆறு கோடி எல்.பி.ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். 23 கோடிக்கும் மேற்பட்ட எல்.பி.ஜி வாடிக்கையாளர்கள் பெஹல் திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் உள்ள வெளிப்படைத் தன்மை, போலி கணக்குகளைக் கண்டறிய உதவியுள்ளது. “மானியத்தை விட்டுக்கொடுங்கள்” என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் எல்.பி.ஜி மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைப் பாராட்டிய பிரதமர், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட விரிவாக்கத்தினால் இந்நிறுவனம் எல்.பி.ஜி உற்பத்தியை இருமடங்காக உயர்த்தி உஜ்வாலா திட்டத்திற்கு பெருமளவு பங்களித்துள்ளது என்று கூறினார்.
நாட்டிலுள்ள நகர எரிவாயு விநியோகத் திட்ட (சி.ஜி.டி) விரிவாக்கத்தின் மூலம் தூய்மையான இயற்கை எரிவாயு பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. பத்து சி.ஜி.டி. ஏலச்சுற்றுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின், நாட்டிலுள்ள 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கப்படும். தேசிய எரிவாயு விநியோக அமைப்பு அல்லது பிரதமர் உர்ஜா கங்கா திட்டம், எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கி, எரிசக்தி தளத்தில் எரிவாயுவில் பங்களிப்பை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும், கூடுதலாக 15000 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் வழியே எரிவாயு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் வரை குறைத்து அந்நிய செலாவணியை அரசு சேமித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஐ.ஆர்.ஈ.பி திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், முக்கியமாக இந்த கட்டமைப்புக்காக இரவும்-பகலும் உழைத்த ஊழியர்களையும் பாராட்டினார். இந்தத் திட்டத்தின் கட்டமைப்பின் போது 20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர். இவர்கள் தான், இத்திட்டத்தின் உண்மையான நாயகர்கள் என்று கூறினார்.
இத்திட்டம் மூலம் எரிசக்தி சாராத் துறையில் பி.பி.சி.எல் புத்திசாலித் தனமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை பிரதமர் பாராட்டினார். “சகோதரர்களே, பெட்ரோ கெமிக்கல் என்ற ரசாயனப் பொருட்கள் குறித்து நாம் அதிகம் பேசுவதில்லை. நம் கண்ணுக்குத் தெரியாமல், நமது வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களில் பெட்ரோ கெமிக்கல் இடம்பெற்றுள்ளது. ஆனால், இவை பெரும்பாலும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி செய்யப்படுவது நமது வளர்ச்சியைக் குறிக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஐ.ஆர்.ஈ.பி. அமலாக்கத்திற்குப் பிறகு கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ப்ரொஃபலின் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார். மேலும், பிற பெட்ரோ கெமிக்கல் பொருட்களானவை சாயம், மை, பூச உபயோகப்படும் பொருட்கள், சுத்திகரிப்பு பொருட்கள் போன்ற பலவற்றிலும் உபயோகப்படுத்தப்படும் என்றும், இது சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் கொச்சியில் அமைக்கப்பட்டு, தொழில் வாய்ப்புகள் பெருகும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன என்று கூறிய பிரதமர், கடந்த நூறு ஆண்டுகள் காணாத வகையில் ஆகஸ்ட் மாதம் கேரளா சந்தித்த மிக மோசமான மழை வெள்ளத்தின் போது, பி.பி.சி.எல் நிறுவனம் அனைத்து இன்னல்களையும் தாண்டி தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி உற்பத்தியை மேற்கொண்டு வந்தது. “நாட்டின் வளர்ச்சிக்காக கொச்சியின் பங்களிப்பு நமக்கு பெருமை அளித்தாலும், நாம் அவர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம்” என்று பிரதமர் கூறினார். தென்னிந்தியாவில் பெட்ரோ கெமிக்கல் புரட்சியை கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மேற்கொண்டு புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து தேவைகளுக்கும் ஆதரவளிக்கட்டும் என்று பிரதமர் வாழ்த்தினார்.
ஈட்டுமன்னூரில் பி.பி.சி.எல் நிறுவனம் அமைக்கவுள்ள இரண்டாவது திறன் மேம்பாட்டு வளாகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அமைக்கப்பட உள்ள இந்நிறுவனம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
ரூ.50 கோடி மதிப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம், தனது கொச்சின் எல்.பி.ஜி. நிரப்பும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உருளை சேமிப்புக் கலனை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது எல்.பி.ஜி. சேகரிப்புத் திறனை மேம்படுத்தி, சாலைகளில் எல்.பி.ஜி. டேங்கர் பயன்பாட்டைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*********
(Release ID: 1561654)