பிரதமர் அலுவலகம்

காந்திநகரில் 9-வது துடிப்புமிக்க குஜராத் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர்

இதுவரை செய்யப்படாத தொழில்களை செய்வதற்கும் இந்தியா தயார் என பிரதமர் பேச்சு
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி வர்த்தகர்களுக்கு அழைப்பு, இந்தியாவில் தொழில் செய்வது மிகப்பெரும் வாய்ப்பு என்று கருத்து
ஜனநாயகம், புவியமைப்பு மற்றும் தேவையை வழங்கும் ஒரே இடம் இந்தியா
பொருளாதாரத்தை வலுப்படுத்த தீவிரமாக கட்டமைப்பு சீர்திருத்தங்கள்: பிரதமர்

Posted On: 18 JAN 2019 3:35PM by PIB Chennai

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தில் 9-வது துடிப்பு மிக்க குஜராத் (Vibrant Gujarat) மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், உஸ்பெகிஸ்தான், ருவாண்டா, டென்மார்க், செக் குடியரசு, மால்டா ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

சர்வதேச அளவிலான தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இங்கு முதலீட்டாளர்களுக்கு உகந்த வர்த்தக சூழலும், தேவையான கட்டமைப்பும், வசதிகளும் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமர் பேசும்போது, “வர்த்தகத்துக்கு தற்போது இந்தியா தயாராக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், எளிதாக தொழில் செய்வதற்கான சர்வதேச தரவரிசையில், நாங்கள் 65 இடங்கள் முன்னேறியுள்ளோம். அடுத்துவரும் ஆண்டுகளில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா இருப்பதை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனது குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்றார்.

 

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மீது உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், மூடி’ஸ் போன்ற சர்வதேச அமைப்புகள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதாக திரு.நரேந்திர மோடி கூறினார். மேலும் அவர் பேசும்போது, “தொழில் செய்வதை மிகவும் எளிதானதாகவும் நாங்கள் மாற்றியுள்ளோம். வரிமுறையை எளிதாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம், பரிமாற்ற செலவு குறைந்துள்ளது. நடைமுறைகள் திறன்வாய்ந்ததாக மாறியுள்ளன. டிஜிட்டல் நடவடிக்கைகள் மற்றும் ஒரே இடத்தில் தலையீடு ஆகியவற்றின் மூலம், தொழிலை வேகமாகச் செய்ய வைத்துள்ளோம்” என்றார்.

 

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் வலுவான பொருளாதார அடிப்படையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், “7.3% என்ற சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது, 1991-ம் ஆண்டு முதல், எந்தவொரு இந்திய அரசிலும் இல்லாத உயர்ந்தபட்சமாகும். அதேநேரத்தில், 4.6 சதவீதம் என்ற சராசரி பணவீக்கம்,  தாராளமயமாக்கல் நடவடிக்கையை இந்தியா தொடங்கிய 1991-ம் ஆண்டு  முதல் எந்தவொரு இந்திய அரசிலும் இல்லாத குறைந்தபட்ச விகிதமாகும்,” என்றார்.

 

நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், “இந்தியாவுக்கு அடிக்கடி வருபவர்கள், இங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை, செயல்பாடு அடிப்படையிலும், தீவிரத்தின்  அடிப்படையிலும் உணர முடியும். கடந்த 4 ஆண்டுகளில், நிர்வாகத் தலையீட்டை குறைப்பது மற்றும் ஆளுமையை அதிகரிப்பதே எனது அரசின் நோக்கமாக உள்ளது. எங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்த தீவிர கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக தொடர்ந்து இருப்போம்,” என்றார்.

 

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மிகப்பெரும் சுற்றுச்சூழல் அமைப்பை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், உலகத்தரம் வாய்ந்த ஆய்வு வசதிகள், முதலீட்டுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். மேலும் அவர், “எங்களது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். எங்களதுஇந்தியாவில் தயாரிப்போம்இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு, “டிஜிட்டல் இந்தியா”, “திறன் மிகு இந்தியாபோன்ற திட்டங்கள் சிறந்த முறையில் ஆதரவு அளிக்கின்றன,” என்றார்.

 

பிரதமர் மேலும் பேசும்போது, 2017-ம் ஆண்டில், உலக அளவில் அதிவேகமாக வளரும் சுற்றுலாப்பகுதிகளில் ஒன்றாக நாங்கள் இருந்தோம். இந்தியா, 2016-ம் ஆண்டைவிட 14 சதவீத வளர்ச்சியைப் பெற்றது. அதேநேரத்தில், உலக அளவிலான சராசரி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. உலக அளவில் விமானப் போக்குவரத்து சந்தையிலும் கூட, நாங்கள்  வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். 4 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது” என்றார். “இதன்மூலம், இந்தியா அளப்பரிய வாய்ப்பு கொண்ட பகுதியாக உள்ளது. உங்களுக்கு ஜனநாயகம், புவியமைப்பு மற்றும் தேவையைக் கொண்ட ஒரே இடமாக திகழ்கிறது” என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

துடிப்புமிக்க குஜராத் மாநாடு குறித்து பேசிய பிரதமர், “இது சர்வதேச அடித்தளமாக மாறியுள்ளது. பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டிருப்பதன் மூலம், சர்வதேச ஒத்துழைப்பு என்பது தேசிய தலைநகரங்களில் மட்டுமல்லாமல், மாநில தலைநகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது வெளிப்பட்டுள்ளது,” என்றார்.

 

கொள்கை அடிப்படையிலான ஆளுமை மற்றும் தொலைநோக்கு அடிப்படையிலான தலைமைப்பண்புTop of Form

Top of Form

 ஆகியவற்றுக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பாராட்டு தெரிவித்தார். எளிதாக தொழில் செய்வதற்காக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று தொழிலதிபர்களுக்கு அவர் உறுதியளித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்சியோயேவ், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ரஸ்முஸென், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரெஜ் பாபிஸ், மால்டா பிரதமர் டாக்டர் ஜோசப் மஸ்கட் ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

துடிப்பான குஜராத் மாநாடு-2019-ன் சிறப்பம்சமாக காணொலிக்காட்சி மூலமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ சிறப்பு செய்தியை வழங்கினார். அவர் பேசும்போது, “நமது இரு நாட்டு மக்களுக்கும் வலுவான இணைப்பின் அடையாளமாக குஜராத் திகழ்கிறது. ஒன்றாக இணைந்து, எதிர்காலத்துக்கான எல்லையில்லா வாய்ப்புகளை நாம் கட்டமைத்துள்ளோம்,” என்றார்.

 

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் வட்ட மேஜை கலந்துரையாடல், “ஆப்பிரிக்கா தினம்”, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மாநாடு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உள்ள வாய்ப்புகள் குறித்த வட்ட மேஜை நிகழ்ச்சி உள்ளிட்ட மிகப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கும் மேலாக, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி, ஆசியாவின் எல்லைகடந்த கடல் போக்குவரத்து முனையமாக இந்தியாவை மாற்றுவதற்காக துறைமுகம் அடிப்படையிலான மேம்பாடு மற்றும் உத்திகள் குறித்த கருத்தரங்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றி மற்றும் அரசின் முக்கிய நடவடிக்கைகளை வெளிப்படுத்துவது ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

 

முதலாவது “துடிப்புமிக்க குஜராத்” என்ற மாநாடு, 2003-ம் ஆண்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்கீழ் நடைபெற்றது. அப்போது, குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். குஜராத்தில் முதலீட்டை அதிகரிக்கச் செய்வதற்காக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார். அதுமுதலே, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக இந்த மாநாடு அமைந்தது.

*****


(Release ID: 1560591) Visitor Counter : 226