இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டுக்கள் துறை-நடப்பாண்டு சாதனை

Posted On: 10 DEC 2018 11:20AM by PIB Chennai

விளையாட்டுத் துறை சாதனைகளைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருந்தது. மத்திய அரசின், உயர்தர விளையாட்டுத் திறன்களை வளர்த்தல் மற்றும் நடுத்தர நிலையில் விளையாட்டு நட்சத்திரங்களை இனம் கண்டு பயன்படுத்துதல் ஆகிய இருமுனை அணுகுமுறை மிகச் சிறந்த பயன்களைத் தந்துள்ளது. இந்த ஆண்டு கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 66 பதக்கங்களையும், ஜகார்த்தா ஆசிய விளையாட்டுக்களில் 69 பதக்கங்களையும், மாற்றுத்திறனாளிகள் ஆசிய விளையாட்டுக்களில் 72 பதக்கங்களையும் இந்தியா வென்றது மிகச் சிறந்த சாதனை செயல்பாடாக இருந்தது. 2018 ஆம் ஆண்டின் விளையாட்டுக்கள் துறையின் சாதனைகள் வருமாறு:

  1. கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்கள் 2018
  • முதலாவது கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்கள் 2018 ஜனவரி மாதம் 31-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது.
  • 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 3507 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
  • பதக்க விவரம் – 199 தங்கம் + 199 வெள்ளி + 275 வெண்கலப் பதக்கங்கள்.
  • ஒட்டு மொத்த சாம்பியன் முடிவுகள்:
    1. அரியானா – 38 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலம். மொத்தம் : 102 பதக்கங்கள்.
    2. மகாராஷ்டிரம் – 38 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலம். மொத்தம் 111 பதக்கங்கள்.
  1. கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்கள் 2018-ன் பெரிய சாதனைகள் :
  • 1178 விளையாட்டுத் திறன் மிக்கவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஆண்டு செலவினம் ரூ.5 லட்சம்.

3 மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு:

விளையாட்டு வீரர்களின் நலனுக்கான முக்கிய நடவடிக்கையாக மத்திய விளையாட்டுக்கள் அமைச்சகம் தலை சிறந்த விளையாட்டு வீர்ர்களுக்கான ஓய்வூதியத்தை 7.6.2018 அன்று உயர்த்தி அமைத்தது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஓய்வூதிய வீதம் தற்போது உள்ளதை போல இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. புதிய ஓய்வூதிய வீதங்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.12 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆசிய போட்டிகள் ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்களுக்கு ஓய்வூதிய வீதங்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஈடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதிய வீதங்கள் 2018 ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வந்தன.

4. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை திட்டம் :

கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர் விளையாட்டுக்கள் துறை விளையாட்டு மேம்பாட்டுக்கான முக்கிய நடவடிக்கை ஒன்றை 22.07.2018 அன்று மேற்கொண்டது. இதன்படி கேலோ இந்தியா திறன் அடையாள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1178 விளையாட்டுக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு துறை ஒப்புதல் அளித்தது. இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயிற்சி, மேம்பாடு, உணவு, தங்குமிடம், போட்டிகளின் போது கைச்செலவின படிகளுடன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியன வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். இத்தொகை காலாண்டுக்கு ஒருமுறை அவர்களது கைச்செலவினம், காயங்களுக்கான சிகிச்சை, போக்குவரத்து (அவர்களுக்கு / பெற்றோருக்கு /  குடும்பத்தினருக்கு) ஆகியவற்றுக்காக வழங்கப்படும்.

5. தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை (என்.ஏ.டி.ஏ.)

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுக்களின் போது என்.ஏ.டி.ஏ. தனது நடவடிக்கைகளை தொடங்கியது. விளையாட்டுக்களின் நேர்மைத் தன்மையை பராமரிக்கவும், சர்வதேச விளையாட்டுக்களில் நேர்மைத் தரங்கள் பற்றி நமது விளையாட்டு வீரர்கள் அறிந்து கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவின. பள்ளி விளையாட்டுக்களில் ஊக்க மருந்து அறவே அகற்றப்படும் வகையில் என்.ஏ.டி.ஏ. மொத்தம் 377 ஊக்க மருந்து சோதனைகளை நடத்தியது.

6. மணிப்பூர் தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் :

மணிப்பூர் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் இந்த வகையில் அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக் கழகமாக திகழ்கிறது. இதில், விளையாட்டு விஞ்ஞானம், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி போன்ற அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும். குறிப்பிட்ட விளையாட்டுக்களில் இந்த பல்கலைக்கழகம் தேசிய பயிற்சி மையமாகவும் செயல்படும். இந்த வகையில் இந்த பல்கலைக்கழகத்தில் மிகச் சிறந்த சர்வதேச நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்.

இந்த பல்கலைக்கழகம் விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டு அறிவியல், உடற்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஆகியவற்றை வழங்கும். எதிர்காலத்தில் பல்வேறு விளையாட்டுக் கல்வி, பயிற்சி பாடங்களில் சிறப்பு பட்டப்படிப்புத் திட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. பி.பி.இ.எஸ். மற்றும் பி.எஸ்.சி (விளையாட்டு பயிற்சி), எம்.ஏ. (விளையாட்டு உளவியல்) என்ற புதிய பட்ட மேற்படிப்பு வகுப்பு ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

7. விளையாட்டு வர்த்தக மேலாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு பட்டயம் :

நாட்டின் ஒட்டு மொத்த விளையாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வளர்க்கவும் விளையாட்டுக்கள் அமைச்சகம் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றை தொடங்குவதற்கு ரோதக், இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிதி வழங்கி உள்ளது. இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் வர்த்தக மேலாண்மை பாடத்திற்கு இணையான விளையாட்டு வர்த்தக மேலாண்மை பட்டமேற்படிப்பு பட்டய வகுப்புகள் 2018-19 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கி உள்ளன.

8. என்.சி.எஸ்.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு உதவி :

விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்.சி.எஸ்.எஸ்.ஆர்.) உயர்நிலை ஆராய்ச்சி, கல்வி மற்றும் புதுமைப் படைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டது. தலை சிறந்த தடகள வீரர்களின் உயர்ந்த செயல்பாட்டுத் திறனுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2 பகுதிகள் உள்ளன. முதலாவது பாட்டியாலா நகரில் தேசிய விளையாட்டுக்கள் நிறுவனம், என்.ஐ.எஸ்.-ல் என்.சி.எஸ்.எஸ்.ஆர். ஒன்றை அமைப்பது. இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் விளையாட்டு அறிவியல் துறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்/ நிறுவனங்கள்/ மருத்துவமனைகள் ஆகியவற்றின் விளையாட்டு மருத்துவத் துறைகள் ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது. மருத்துவக் கல்லூரிகளின் விளையாட்டு மருத்துவத் துறைகள் மருத்துவ பட்ட மேற்படிப்பு பட்டங்கள் அதாவது எம்.டி. (விளையாட்டுக்கள் மருத்துவம், விளையாட்டுக்கள் மருத்துவத்தில் பட்டய வகுப்புகள் ஆகியவற்றை நடத்தும் பல்கலைக்கழகங்களின் விளையாட்டு விஞ்ஞான துறைகள், விளையாட்டு உடல் செயலியல், விளையாட்டு உயிரி வேதியியல், விளையாட்டு ஊட்டச்சத்தியல், விளையாட்டு உயிரி எந்திரவியல், விளையாட்டு பயிற்சி முறைகள் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி பட்ட வகுப்பையும், விளையாட்டுத் துறையில் எம்.பி.டி. பட்ட வகுப்பையும், விளையாட்டு உளவியல் பாடத்தில் எம்.ஏ. பட்டப் படிப்பையும் விளையாட்டுக்கள் மனிதரளவையியல் பாடத்தில் சான்றிதழ் வகுப்பையும் நடத்தும். இந்த திட்டத்தின் இரண்டாவது பகுதி தொடர்பாக தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்கள் மற்றும் 6 மருத்துவக் கல்லூரிகள்/ நிறுவனங்கள்/ மருத்துவமனைகள் ஆகியன முறையே விளையாட்டு அறிவியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவத் துறையை தொடங்குவதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன.

 

வி.கீ/சி.ஜே/ரேவதி



(Release ID: 1556241) Visitor Counter : 326