பிரதமர் அலுவலகம்

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முந்தைய பிரதமரின் அறிக்கை

Posted On: 27 NOV 2018 10:09PM by PIB Chennai

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் புறப்படுவதற்கு முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.

“அர்ஜென்டினாவால் நடத்தப்படும் 13-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நான் பியுனஸ் அயர்ஸ் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

உலகின் மிகப் பெரிய 20 பொருளாதார நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்க்கப் பன்முக முயற்சியை ஜி-20 மேற்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தனது செயல்பாட்டின் மூலம் நிலையான, நீடித்த உலக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஜி-20 பாடுபடுகிறது. உலகில் இன்று வெகு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இந்த நோக்கம் மிக முக்கியமானதாகும்.

இந்த உச்சி மாநாட்டின் மையப் பொருள்  “நியாயமான, நீடித்த வளர்ச்சிக்குப் பொதுக்கருத்தை உருவாக்குதல்” என்பதாகும். இந்த மையப் பொருள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பில் உள்ள நமது உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஜி-20 நாடுகளின் கடந்த 10 ஆண்டு காலப் பணிகளை ஆய்வுச் செய்வதற்கும் வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள  வழிவகைகளைப் பட்டியலிடுவதற்கும் ஜி-20 நாடுகளின் மற்றத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிலை சர்வதேச நிதி மற்றும் வரிவிதிப்பு முறைகள், எதிர்காலப் பணி, மகளிருக்கு அதிகாரமளித்தல், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்து நாங்கள் விவாதிக்க இருக்கிறோம்.

நிதி சார்ந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, உலகப் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டுள்ளன. சம கால எதார்த்த நிலைகளைப் பிரதிபலிக்கும் சீர்திருத்தப்பட்ட பன்முகத் தன்மையின் அவசியத்தை நான் முன்னிலைப்படுத்துவேன். மேலும் நல்லதொரு உலகத்திற்கான கூட்டு நடவடிக்கையை வலுப்படுத்தவும் நான் வலியுறுத்துவேன். பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைவாதல், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், கூட்டான நடவடிக்கையை விரிவுப்படுத்துவதும் மிக முக்கியமான தேவையாகும்.

கடந்த காலத்தைப் போலவே இந்த உச்சி மாநாட்டிற்கு இடையே பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் நான் எதிர்நோக்கி உள்ளேன்”.



(Release ID: 1554078) Visitor Counter : 199