பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடியும், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

Posted On: 17 NOV 2018 7:39PM by PIB Chennai

தமது பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவு வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் மாண்புமிகு இப்ராஹிம் முகமது சோலிஹ், வரவேற்று உபசரித்ததுடன், நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

      மாலத்தீவு புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தம்மை அழைத்து கௌரவித்தமைக்காக, அதிபர் சோலிஹிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.  மாலத்தீவில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தத் தேவையான ஜனநாயகத்தை வலுப்படுத்தியமைக்காக, மாலத்தீவு மக்களுக்கு, இந்திய மக்களின் பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

      இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்புறவில் சிறிது காலம் ஏற்பட்ட பின்னடைவை நினைவுகூர்ந்த இருதலைவர்களும், மாலத்தீவின் புதிய அதிபராக திரு. சோலிஹ் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இருதரப்பு நட்புறவும், ஒத்துழைப்புக்கான பிணைப்புகளும் புதுப்பிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

      இருதலைவர்களும் நடத்திய சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவச் செய்வதன் அவசியத்தை ஒப்புக்கொண்டதுடன், பரஸ்பர நலனிலும், இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மையை பராமரிக்கவும் உறுதிபூண்டனர்.

      இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதியிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதலைவர்களும் அசைக்க முடியாத ஆதரவு தெரிவித்தனர்.

      மாலத்தீவின் புதிய அதிபராக தாம் பொறுப்பேற்றுள்ள சூழலில், அந்நாட்டின் தற்போதைய மோசமான பொருளாதார நிலை குறித்தும், அதிபர் சோலிஹ், பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.  எந்தெந்த வழிகளில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப்பணிகளில் ஒத்துழைப்பது, குறிப்பாக, புதிய அரசு மாலத்தீவு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.  மிகவும் குறிப்பாக, வீட்டுவசதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் போன்றவற்றை, தீவு நாடான மாலத்தீவில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிபர் சோலிஹ் எடுத்துரைத்தார்.

      நீடித்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதில், மாலத்தீவிற்கு இந்தியா உதவி செய்யும் என பிரதமர் மோடி, அதிபர் சோலிஹிடம் உறுதிபடத் தெரிவித்தார்.  அத்துடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா மாலத்தீவிற்கு உதவத் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மாலத்தீவின் தேவைகளுக்கு ஏற்ப என்னென்ன பணிகளை மேற்கொள்வது என்பது பற்றி இருதரப்பும் விரைவில் சந்தித்து பேச்சுநடத்த வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

      இருநாடுகளுக்கும் பலன் அளிக்கும் விதமாக, இந்திய நிறுவனங்கள் மாலத்தீவின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.  இருநாட்டு மக்களும் பரஸ்பரம் மற்ற நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதை ஒப்புக்கொண்ட தலைவர்கள், விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

      அரசுமுறை பயணமாக விரைவில் இந்தியா வருமாறும் மாலத்தீவு அதிபர் சோலிஹிற்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அதிபர் சோலிஹ் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் இம்மாதம் 26 ஆம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்து, அதிபர் சோலிஹின் இந்திய பயணத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.

      பிரதமர் திரு. நரேந்திர மோடி, மிக விரைவில் மாலத்தீவிற்கு அரசுமுறை பயணமாக வருவார் என்றும் அதிபர் சோலிஹ் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்.

 

******

 


(Release ID: 1553072) Visitor Counter : 254