பிரதமர் அலுவலகம்

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமரின் அறிக்கை

Posted On: 13 NOV 2018 5:40PM by PIB Chennai

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்:

“ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக நான் நவம்பர் 14, 15 தேதிகளில் சிங்கப்பூர் செல்லவிருக்கிறேன். இத்துடன் மண்டல ஒருங்கிணைந்த பொருளாதாரப் பங்களிப்புத் தலைவர்களின் கூட்டத்திலும் நான் பங்கேற்க உள்ளேன்.

இந்தக் கூட்டங்களில் எனது பங்களிப்பு ஆசியான் உறுப்பு நாடுகளுடனும், விரிவான இந்திய-பசிபிக் மண்டலத்துடனும் நமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதன் அடையாளமாக இருக்கும். ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் மற்ற தலைவர்களுடன் எனது கலந்துரையாடலை நான் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன்.

நவம்பர் 14 அன்று சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் முக்கிய உரையாற்றும் முதலாவது அரசுத் தலைவர் என்ற பெருமையை நான் பெறவிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய நிதி சார்ந்த  தொழில்நுட்ப நிகழ்வு என்ற முறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறையில் இந்தியாவின் பலத்தைக் காட்டுவதற்கு மட்டுமின்றி புதிய கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் உலகின் கூட்டாளிகளைக் கண்டறிவதற்கும் இந்த விழா சரியான இடமாக இருக்கும்.

எனது பயணத்தின் போது இந்தியா, சிங்கப்பூர் கூட்டு ஹாக்கத்தானில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றியாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் கூட நான் பெறவிருக்கிறேன். சரியான ஊக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறை வளர்த்தலையும் நாம் கிடைக்கச் செய்தால் மனிதகுலம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகளை அளிக்கும் உலகத் தலைவர்களாக வரும் திறன் நமது இளைஞர்களுக்கு உள்ளது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளுடன் வளர்ந்து வரும் நமது பங்களிப்புக்குப் புதிய உத்வேகத்தை எனது சிங்கப்பூர் பயணம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

சிங்கப்பூருக்கு நான் புறப்படும் நேரத்தில், இந்த ஆண்டு ஆசியான் அமைப்புக்குத் திறன் மிக்கத் தலைமையை அளித்துள்ள சிங்கப்பூருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் ஆசியான் மற்றும் அது தொடர்பான உச்சி மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 



(Release ID: 1552637) Visitor Counter : 146