பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் ஹர்ஸிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்

Posted On: 07 NOV 2018 10:05AM by PIB Chennai

உத்தராகண்ட் ஹர்ஸிலில் இந்திய இராணுவம் மற்றும் இந்திய-திபெத்திய எல்லை காவல்படை வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார்.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தொலைதூரத்தில் உள்ள பனிமலைகளில் இவர்கள் செய்யும் முழு ஈடுபாட்டுடனான பணியினால் நம் நாடு வலுவடைகிறது, மேலும், 125 கோடி இந்தியர்களின் எதிர்காலமும் கனவும் பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார். தீபாவளிப் பண்டிகை ஒளிகளின் திருவிழா, அது நல்ல ஒளியைப் பரப்பி, பயத்தை மறையச்செய்கிறது. இந்த வீரர்கள் அவர்களின் கடமை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி பயத்தை நீக்குகின்றனர்.

தான் குஜராத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே தீபாவளி அன்று ராணுவ வீரர்களை சந்தித்து வருவதை பிரதமர் நினைவு கூர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் தான் பங்கேற்றபோது இந்திய-திபெத்திய எல்லை காவல்படை வீரர்களுடன் தான் கலந்துரையாடியது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு துறையில் இந்தியா மிகவேகமாக முன்னேறிவருகிறது என்று பிரதமர் கூறினார். மேலும், முன்னாள் வீரர்களுக்காக ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் உட்பட மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், இந்திய ஆயுப் படை உலகெங்கிலும் இருந்து  பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், சுற்றுபுறத்தில் இருந்து அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வந்திருந்த மக்களிடமும் பிரதமர் உரையாடினார். 

****



(Release ID: 1552035) Visitor Counter : 163