மத்திய அமைச்சரவை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 OCT 2018 6:59PM by PIB Chennai

இந்திய குடியரசின் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனமும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் போது கையெழுத்திடப்படும். 

 

இருநாடுகளுக்கும் இடையே சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோளாகும்.  இருநாடுகளும்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் தங்களின் பலம், சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகள்  போன்றவற்றை புரிந்துகொள்வதற்கான சூழலை  இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.  இருநாடுகளின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி, இந்த துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு முயற்சி மற்றும் தொழில் வர்த்தக கூட்டு போன்றவற்றுக்கு உதவும்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திறன் மேம்பாடு, விரைந்த தொழில் முனைவோர் வளர்ச்சி, கண்காட்சிகள் மூலம் இருநாடுகளின் சந்தைக் குறித்து தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ஒத்துழைப்பு மூலம் புதிய சந்தைகள், கூட்டு முயற்சிகள், சிறந்த செயல்முறைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் உள்ளதால், இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறு தொழில்கள் குழும நிறுவனம் இதுபோன்ற ஒத்துழைப்புகளில் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டுள்ளதால், இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்த இதுவே சிறந்த அமைப்பாகும்.

*********



(Release ID: 1548468) Visitor Counter : 157