பிரதமர் அலுவலகம்

மகாத்மா காந்தி சர்வதேச துப்பரவு மாநாடு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

Posted On: 02 OCT 2018 3:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில் உரையாற்றினார். மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, உலகம் முழுவதும் உள்ள தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதர தலைவர்களை ஒரணியில் திரட்டிய நான்காவது சர்வதேச மாநாடு ஆகும்.  இதையொட்டி அமைக்கப்பட்ட டிஜிட்டல் கண்காட்சியையும்,  ஐ நா  தலைமைச் செயலாளர் திரு அண்டோனியோ குட்ரஸுடன் இணைந்து பிரதமர் பார்வையிட்டார். மகாத்மா காந்தியின் நினைவு அஞ்சல்தலை மற்றும் மகாத்மா காந்தியின் பிரசித்திப்பெற்ற ‘ வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடல் அடங்கிய குறுந்தகட்டை இரு தலைவர்களும் வெளியிட்டனர்.  தூய்மை இந்தியா விருதுகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

  நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தூய்மைப் பணி தொடர்பாக மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்தததை சுட்டிக்காட்டினார்.  மகாத்மா காந்தி 1945-ம் ஆண்டு வெளியிட்ட ‘ ஆக்கப்பூர்வத் திட்டம்’  என்ற கட்டுரையில் கிராமப்புறத் துப்புரவு  முக்கிய இடம் பெற்றிருந்ததையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

 சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தாவிட்டால், அந்த அசுத்தமான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும் என்றும்  பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு மாறாக, ஒருவர் தம்மைச் சுற்றியுள்ள பகுதியை தூய்மைப்படுத்தினால், அவர் உற்சாகம் அடைவதுடன், ஏற்கனவே உள்ள எதிர்மறை சூழலுக்கு ஆளாகமாட்டார் என்றும்  பிரதமர் தெரிவித்தார்.

 மகாத்மா காந்தியின் உத்வேகம்தான்   தூய்மை இந்தியா திட்டத்திற்கு வழி வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.   மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட இந்தியர்கள்,  தூய்மை இந்தியா இயக்கத்தை, உலகின் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் 38 சதவீதமாக இருந்த  கிராமப்புற சுகாதாரம், தற்போது 94 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்த அவர்,  நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டும் நிலையில் இந்தியா இருப்பதாகவும் குறிப்பிட்டார். உலகைத் தூய்மைப்படுத்த, அரசியல் தலைமை, அரசு நிதியுதவி, ஒத்துழைப்பு மற்றும் மக்கள் பங்களிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

-----



(Release ID: 1548262) Visitor Counter : 865