பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ராஞ்சியில் துவக்கி வைத்தார் பிரதமர்
Posted On:
23 SEP 2018 4:14PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று சுகாதார உறுதி அளிப்புத் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
ஏராளமான மக்கள் கூடியிருந்த நிகழ்ச்சி அரங்குக்கு வருவதற்கு முன், பிரதமர் இந்தத் திட்டம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், சைபாஸா மற்றும் கோடர்மா ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள மருத்துக் கல்லூரிகளுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். பத்து சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களையும் அவர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஏழை மக்கள் மற்றும் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் மற்றும் மருத்து சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இதன்மூலம் நாட்டில் 50 கோடி மக்கள் பயனடைவதாகவும், உலகிலேயே மிகப் பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் இது என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கோ, அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மக்கள் தொகைக்கோ கிட்டத்தட்ட சமமானது என்று கூறினார்.
ஆயுஷ்மான் பாரத்-ன் முதல் பகுதியாக, பாபாசாகெப் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் துவக்கப்பட்டன என்றும், இதன் இரண்டாம் பகுதியாக - அதாவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக துவக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது, எப்படி விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது குறித்து விளக்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இதய நோய், புற்றுநோய் போன்ற மிக ஆபத்தான நோய்கள் உட்பட 1,300 உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற இந்தத் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தில் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின்படி, வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் பயனாளியின் உடல்நலக் குறைவு குறித்த ஆய்வுகள், மருந்துகள், மருத்துவமனையில் அனுமதிக்குமுன் ஏற்படும் செலவீனங்கள் என பல வகையில் பயன்படும். இந்தத் திட்டம் குறித்த மேலும் விவரங்களை 1455 அல்லது பொதுசேவை மையத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.
பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தில் மாநிலங்களும் அங்கம் வகிப்பதாக தெரிவித்த பிரதமர், எந்த மாநிலத்திற்கு மக்கள் சென்றாலும் அந்த மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் பயனை அடைய முடியும் என்று குறிப்பிட்டார். இதுவரை, இந்த மருத்துவக் காப்பீடு திட்டதில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் சேர்ந்திருப்பதாக பிரதமர் கூறினார்.
நிகழ்ச்சியில் 10 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிரதமர், தற்போது நாடு முழுவதும் 2,300 நல வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், நான்கு ஆண்டுகளுக்குள் நாடுமுழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்களை ஏற்படுத்தவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் சுகாதாரத் துறையை முழுமையான அணுகுமுறையுடன் மேம்படுத்த, அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், குறைந்த செலவிலான மருத்துவ வசதி மற்றும் நோய் வருமுன் தடுக்கும் நடவடிக்கை என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச் சேவை அளிப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்புடன் இந்தத் திட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
---------
(Release ID: 1546997)
Visitor Counter : 1527