பிரதமர் அலுவலகம்

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடிதம்

Posted On: 05 SEP 2018 7:38PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தில் டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆசிரியர்கள் ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, தகவல் அளித்தல், கல்வி புகட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளிக்குழந்தைகளின் வாழ்வில் ஆசிரியர்கள் ஏற்படுத்தியுள்ள அபரிதமான தாக்கத்தை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவர்கள் கற்பிக்கும் கல்வி மாணவர்கள் மனதில் அவர்களது வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ஆசிரியர் பணி மிகவும் உன்னதமான பணி என்பதோடு, ஒவ்வொரு தனிநபரின்  பண்புகள், திறமை மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும்” என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்த கருத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடிய சமுதாயத்தால்தான்  21ஆம் நூற்றாண்டு வடிவமைக்கப்படும் என்றும் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். “நமது ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது” என்றால் மிகையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

“நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை நீங்கள் உடனுக்குடன் அறிந்து வைத்திருப்பதுடன், உங்களிடம் பயிலும் மாணவர்களைத் தொழில்நுட்ப மாற்றத்துடன் இணைத்திருப்பீர்கள்” என்று நம்புவதாகவும், ஆசிரியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு மாற்றங்கள், கல்வித்துறையில்  பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“உங்களைப் போன்ற ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த முயற்சிகளால், இலக்கு நிர்ணயிக்கும் நிலையிலிருந்து, முடிவுகளை ஏற்படுத்தும் நிலைக்கும், கற்பித்தலில் இருந்து, கற்கும் நிலைக்கும் கவனம் வெற்றிகரமாக திரும்பியுள்ளது.  அடல் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தகுந்த பணி காரணமாக திறன் வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளன. எந்த ஒரு இளைஞருக்கும் தரமான கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவு விழா தொடங்குவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், காந்தியடிகளின் அரிய சிந்தனைகளை மாணவர்களிடையே புதுமையான முறையில் பரப்புவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். “தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்துவதில் ஆசிரியர் சமுதாயத்தின் பங்கு உன்னதமானது” என்றும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

நாட்டின் சுதந்திரதின 75-ஆவது ஆண்டு விழா  கொண்டாடப்படவுள்ள 2022-ஆம் ஆண்டு வாக்கில், புதிய இந்தியாவைப் படைக்க வேண்டும் என்ற தமது தொலைநோக்கு திட்டத்தை வலியுறுத்தியுள்ள பிரதமர், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற, ஆசிரியர்கள், அடுத்த நான்காண்டுகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

“உங்களது மனதிற்கு சரி என்று கருதும் எந்த ஒரு பிரச்சினையிலும் கவனம் செலுத்துவதுடன், உள்ளூர் மக்களை ஒன்று திரட்டி, உங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடுங்கள். இதுவே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் தகுந்த மரியாதையாக அமைவதுடன், புதிய இந்தியாவை உருவாக்கவும் வழிவகுக்கும்” என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

                                     ******



(Release ID: 1545075) Visitor Counter : 621