மத்திய அமைச்சரவை
அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா- இந்தோனேசியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
09 AUG 2018 5:00PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா - இந்தோனேசியா இடையிலான அறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு மே மாதம் புதுதில்லியில், மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தனும், இந்தோனேசியா தரப்பில், ஜகார்த்தாவில் அந்நாட்டின் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. முகமது நசீரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால், இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் பெறும் நன்மைகளைப் பரிமாறிக் கொள்ளவும் வழி ஏற்படும்.
இந்தியா – இந்தோனேசியா இடையே அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் சமத்துவமான பரஸ்பர நலன்பயக்கும் விதத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்தியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிர் அறிவியல்கள் (உயிரி தொழில்நுட்பம், வேளாண்மை, உயிரி மருத்துவ அறிவியல்கள் உட்பட), எரிசக்தி ஆராய்ச்சி, நீர் தொழில்நுட்பங்கள், பேரிடர் மேலாண்மை, விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள், புவிவெளி தகவல், பயன்முறை வேதியல் ஆகியவற்றில் உடனடி கூட்டு முயற்சிக்கு ஏதுவான துறைகள் என கண்டறியப்பட்டுள்ளது.
****
(Release ID: 1542354)
Visitor Counter : 245