பிரதமர் அலுவலகம்

4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி டேராடூனில் முன்னின்று நடத்தவுள்ளார்

Posted On: 20 JUN 2018 1:23PM by PIB Chennai

4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை 2018 ஜூன்     21-ந் தேதியன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி டேராடூனில் முன்னின்று நடத்துகிறார்.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தின் புல்வெளியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் யோகசனப் பயிற்சியில் ஈடுபடும்போது பிரதமரும் அதில் பங்கேற்கிறார்.

சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு உலகெங்கும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் 2015-ம் ஆண்டு புதுதில்லி ராஜ்காட்டில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களிலும், 2016 சண்டிகரில் கேப்பிட்டல் வளாகத்திலும், 2017-ல் லக்னோவில் ராமாபாய் அம்பேத்கர் சபா ஸ்தல்-லில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார்.

யோகா தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்துக்கு பண்டைய இந்திய ஞானிகள் வழங்கிய விலைமதிப்பற்ற கொடையே யோகா என்று தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“யோகா என்பது உடல் ஆரோக்கியம் பேணும் பயிற்சி மட்டும் அல்ல. அது ஆரோக்கிய உறுதியளிப்புக்கு கடவுச்சீட்டு, உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தின் திறவுக்கோல். காலையில் நாம் மேற்கொள்ளும் பயிற்சி மட்டும் அல்ல யோகா. உங்கள் அன்றாட கடமைகளை முழுமையான உணர்வுடனும், உயர்ந்த அக்கறையுடனும் மேற்கொள்ளுவதும் யோகாதான்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“மிதமிஞ்சிய நிலை பிரபலமாகி வரும் இன்றைய உலகில் யோகா கட்டுப்பாட்டையும், சமச்சீர்மையையும் வலியுறுத்துகிறது. மன அழுத்தத்தால் அவதிப்படும் இன்றைய உலகில் யோகா அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கவனம் சிதறிய இன்றைய உலகில் யோகா கவனத்தை குவியப்படுத்த உதவுகிறது. அச்சம் நிறைந்த உலகில் யோகா நம்பிக்கை, வலு, தைரியம் ஆகியவற்றை உறுதியளிக்கிறது” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு யோகா ஆசனங்களின் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகின் பல்வேறு இடங்களில் மக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் படங்களையும் பிரதமர் இந்த ஊடகங்கள் வழியாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

                                                   ******



(Release ID: 1535999) Visitor Counter : 147