• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அமிர்தப் பெருவிழா பூங்கா குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தொலைநோக்குப் பார்வை வடிவம் பெறுகிறது

Posted On: 28 SEP 2024 4:59PM by PIB Chennai

 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நாக்பூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை -44 இல் ஆக்ஸிஜன் பறவை பூங்காவை (அமிர்தப் பெருவிழா பூங்கா) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று திறந்து வைத்தார்.

ஆக்ஸிஜன் பறவை பூங்கா என்பது நாக்பூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை -44 இல் ஜம்தா அருகே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியாகும். சமூக காடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 8.23 ஹெக்டேர் உட்பட மொத்தம் 2.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்கா இயற்கையான பறவை வாழ்விடமாகவும், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஒருங்கிணைக்கும் இந்தத் திட்டம், 2023 மார்ச் மாதத்தில்  ரூ 14.31 கோடி மேம்பாட்டு செலவில் முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

மத்திய இந்தியாவின் இந்தப் பகுதியில் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளை அவதானிப்பதற்கும் குடிமக்களின் பொழுதுபோக்கிற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிலப்பரப்பில் அமிர்தப் பெருவிழா பூங்காவை உருவாக்க மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி நாக்பூருக்கு அளித்த ஆலோசனையின் பேரில்இந்தப் பூங்காவிற்கான யோசனை உருவானது. பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கையான வாழ்விடத்தை வழங்கும் ஒரு பசுமையான இடத்தை நிறுவுவதே இதன் நோக்கமாகும். இயற்கைச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூழலில் அமைந்துள்ள இந்தப் பூங்கா உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜம்தா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகிலுள்ள க்ளோவர் லீஃப் சந்திப்பில் அமைந்துள்ள பூங்காவுடன், நாக்பூர் நகரைச் சுற்றி நான்கு வழி முழுமையான வளைய சாலையை உருவாக்கும் பரந்த உள்கட்டமைப்பு திட்டத்தில் இந்த முயற்சி கூடுதல் பணியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்கா சூரிய பேனல்கள் மூலம் சூரிய சக்தியை ஒருங்கிணைக்கிறது. இது விளக்குகள், நீர் அம்சங்கள் மற்றும் பிற வசதிகளை ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறை மரபுசார் எரிசக்தி ஆதாரங்களை நம்பியிருப்பதைக் குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

பூங்காவின் ஒரு முக்கிய அம்சம் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும், இது அதன் "ஆக்ஸிஜன் பூங்கா" அம்சத்தால் சிறப்பிக்கப்படுகிறது. வேகமாக வளரும், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மரங்களை நடவு செய்வது காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதையும் ஆரோக்கியமான சூழலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பசுமை இடங்களை மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் நாக்பூரின் சமூக வனவியல் பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்  திரு.தேக்சந்த் சாவர்க்கர், சட்டமன்ற உறுப்பினர்கள்  திரு.ஆஷிஷ் ஜெய்ஸ்வால்திரு.விகாஸ் கும்பாரே, அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

*****

PKV/ KV

 

 



(Release ID: 2059862) Visitor Counter : 12

Read this release in: English , Urdu , Hindi , Marathi

Link mygov.in