கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில், மலையாளத் திரைப்படமான 'அஜயந்தே மரணம்: ஒரு கேஸ் ஸ்டடி' திரையிடப்பட்டது. ஸ்ரீஹரி ஹரிதாஸ் இயக்கிய இந்தத் திரைப்படம், அவரது முதல் முழுநீளத் திரைப்படமாகும்.
இதுதொடர்பாக, பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஸ்ரீஹரி ஹரிதாஸ் பேசினார். திரைப்படத்திற்குப் பார்வையாளர்கள் அளித்த வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். திரைப்பட விழாவில் இவ்வளவு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அஜயன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை ஆய்வுத் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மலையாளத் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படாத 'மாக்குமென்டரி' (Mockumentary) எனப்படும் புனைவு, ஆவணப்படக் கலப்பு முறையில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த முறையில் படப்பிடிப்பு, தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதில் பல சவால்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அஜயனின் வாழ்க்கை, மரணம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள மர்மமான சூழ்நிலைகளை ஆராயும் ஆர்வமுள்ள இளம் திரைப்பட இயக்குநராக ஆர்யன் என்ற கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ளது எனவும், ஆர்யன் மூலமாக அஜயனின் கதையைப் பார்வையாளர்களுக்குச் சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீஹரி ஹரிதாஸ் விளக்கினார்.
ஆர்யன் கதாபாத்திரத்தை உருவாக்கும்போது தனது சொந்தப் பண்புகளிலும் சிலவற்றை இணைத்ததாக அவர் தெரிவித்தார். அதேபோல், அஜயன் கதாபாத்திரத்திலும் தனது குணாதிசயங்களுடன் ஒத்துப்போகும் சில அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆர்யனிடம் தனது சாயல்கள் இருப்பதாகவும், அஜயனிடமும் தன்னைப் போன்ற சில குணங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்..
திரைப்படத்தின் வெளியீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தப் படம் முதன்மையாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதற்காக உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். வழக்கமான திரையரங்கு வெளியீட்டுக்கு இப்போதைக்கு முன்னுரிமை அளிக்காமல், திரைப்பட விழாக்கள் மூலம் அதிகமான பார்வையாளர்களிடம் படத்தைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பை திருமதி கோபிகா ஒருங்கிணைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342215®=3&lang=1
(Release ID: 2342215)
****
SK/PLM/SH