இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 3:37PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நாக்பூரில் ராஷ்ட்ராசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் ஸ்வயம்சித்தா மையம் விஜயா – கல்வி மூலம் அதிகாரம் அளிப்பதற்கான பயணம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த மகளிருக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான ஸ்வயம்சித்தா தேசிய மாநாடு 2026-ஐ குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், மகாராஷ்டிர ஆளுநராக தாம் இருந்த காலத்தில் ஸ்வயம்சித்தா திட்டத்தை தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்தார். அத்துடன் தற்போதைய ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா தலைமையில் மகாராஷ்டிரா முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் அதன் நடவடிக்கைகளில் பங்கேற்று இத்திட்டம் விரிவடைந்துவருவது குறித்து பாராட்டினார். பல்கலைக்கழகங்கள் கல்வித் தகுதிகளை அளிப்பதற்கு அப்பால், திறன்கள், பொருளாதார தற்சார்பு, நம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், மகளிருக்கான அதிகாரம் அளித்தலுக்கு தீவிர பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உயர்கல்வியில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்துவருவது குறித்து சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், நாடு முழுவதும் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் தங்கப்பதக்கம் வென்றவர்களில் ஆண்களைவிட, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார். உயர்கல்வி குறித்த அகில இந்திய அளவிலான ஆய்வு குறித்து குறிப்பிட்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். இம்முன்னேற்றம் மகளிருக்கு அதிகரித்து வரும் வாய்ப்புகளையும், நாடு மகளிரின் வளர்ச்சி என்ற நிலையிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலைக்கு மாறி வருவதையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் அரசியலமைப்பு தினம் குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில், அரசியலமைப்பு சபையின் 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341190®=3&lang=1&_gl=1
***
SS/IR/LDN/SH