இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 9:13PM by PIB Chennai
சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு (பிரகாஷ் புரப் - Parkash Purab) நடைபெற்ற புனிதப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சியில் (ஷபாத் கீர்த்தன் - Shabad Kirtan) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், சீக்கிய மரபு என்பது நாட்டுக்காகவும் அதன் கலாசாரத்திற்காகவும் அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த உணர்வின் அடையாளமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குருநானக்கின் போதனைகள் தமது சிறு வயது முதலே முக்கியப் பங்கு வகித்து வருவதாகத் தெரிவித்தார். குருத்வாராக்களுக்குச் செல்வது, புனிதப் பாடல்களைக் கேட்பது, சேவை செய்வது, அனைவருடனும் இணைந்து உணவு உண்பது ஆகியவை மனதிற்கு மகிழ்ச்சியையும் ஆன்மிக நிறைவையும் அளிப்பதாக அவர் கூறினார். பஞ்சாபில் தாம் செலவிட்ட காலம் தமது வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சீக்கியத் துறவிகள், அறிஞர்களின் தொடர்பு தொடர்ந்து கிடைத்து வருவது இறைவனின் அருள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு குரு தேக் பகதூரின் 350-வது தியாக ஆண்டு அனுசரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் அடையாளம், மத நம்பிக்கை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களைக் காப்பதற்காக அவர் தில்லி மண்ணில் தமது உயிரைத் தியாகம் செய்ததாகக் கூறினார். 350 ஆண்டுகள் கடந்தும் அவரது தியாகம் நாடு முழுவதும் போற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். பாய் மதி தாஸ், பாய் சதி தாஸ், பாய் தயாலா ஆகியோரின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
குருத்வாரா சீர்திருத்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய சர்தார் தேஜா சிங் சமுந்த்ரியின் நூறாவது நினைவு ஆண்டும் இந்த ஆண்டு அனுசரிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். அவரது சேவை மனப்பான்மையையும் தியாகத்தையும் போற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் சீக்கிய மரபுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் ஆகியவை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக அவர் தெரிவித்தார். நினைவு நாணயங்கள், அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டதுடன், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.
டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் அனுசரிக்கப்பட உள்ளதாகக் கூறிய பிரதமர், சாகிப் சாதாக்களின் வீரத்தையும் தியாகத்தையும், மாதா குஜ்ரியின் உறுதியையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். இதுபோன்ற வரலாறுகள் நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களை உருவாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் பல பகுதிகளில் போர்களும் மோதல்களும் நடைபெற்று, அப்பாவி மக்களும் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொருவருக்கும் கண்ணியத்துடன் வாழும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே சீக்கிய மதத்தின் உயரிய கொள்கையான 'அனைவருக்கும் நன்மை' (Sarbat Da Bhala) என்பதன் அடிப்படை என்றும் அவர் கூறினார்.
இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், ஒரு இளைஞர் போதைக்கு அடிமையானால் அவரது குடும்பத்தின் கனவுகள் மொத்தமாகச் சிதைந்துவிடும் என்றார். நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, நன்றாகப் படித்து, தங்களது கனவுகளை நிறைவேற்றி, குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதில் சீக்கிய சமூகத்தினர், குருத்வாராக்கள், சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சீக்கிய மத குருமார்களின் அருளோடும், சமூகத்தின் கூட்டு முயற்சியோடும் இளைய தலைமுறையினருக்கு பாதுகாப்பான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2340635)
TV/PLM/PS