கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'தி பிளாக் சீ' என்ற அரபு மொழித் திரைப்படத்தின் படக்குழுவினர் பத்திரிகை தகவல் அலுவலக ஊடக மையத்தில் இன்று (2026 நவம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அறிமுக இயக்குநர் அலாவுதீன் முஸ்தபா, தயாரிப்பாளர் ஹம்தி சமெஹ், படத்தொகுப்பாளரும் நிர்வாகத் தயாரிப்பாளருமான மோட்டாஸ் நஷி ஆகியோர் செய்தியாளர்களுடன் கலந்துரையாடி, திரைப்படத்தின் உருவாக்கம், உலகளாவிய முக்கியத்துவம், படத்தொகுப்பு நுணுக்கங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.
தனது முதல் திரைப்படமான தி பிளாக் சீ உருவாக்கத்திற்கான உத்வேகம் குறித்துப் பேசிய இயக்குநர் அலாவுதீன் முஸ்தபா, அரபு கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு கதையை சர்வதேச மேடைக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். தனிநபர்கள் தங்கள் இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் செல்லும்போது, கட்டுப்பாடற்ற மனித ஆசைகள் எவ்வாறு தீவிரமடைகின்றன என்பதை இப்படம் ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.
எகிப்தியத் திரைப்படத்தை இந்திய, உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தயாரிப்பாளர் ஹம்தி சமெஹ், இக்கதை எந்தவொரு குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ அல்லது நிலப்பரப்பையோ மட்டும் குறிப்பது அல்ல என்றார். உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் அடிப்படையில் ஒரே மாதிரியான ஆசைகளைக் கொண்டிருப்பதால், இத்திரைப்படம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பார்வையாளர்களுடன் எளிதில் சென்றடையும் என அவர் கூறினார்.
அறைக்குள் முடங்கிக் கிடக்கும் கதாபாத்திரங்கள் ஆபத்தான உளவியல் செயலியால் ஈர்க்கப்படுவதை மையமாகக் கொண்ட இப்படத்தில், பதற்றத்தை வெளிப்படுத்த மெதுவான, நிதானமான திரைக்கதை வேகத்தைக் கையாண்டதாகப் படத்தொகுப்பாளர் மோட்டாஸ் நஷி தெரிவித்தார். திருமதி சிருஷ்டி சுரேஷ் குல்யே நெறியாளராகப் பங்கேற்ற இச்செய்தியாளர் சந்திப்பில், சிறப்பான வரவேற்பளித்த இந்தியப் பார்வையாளர்களுக்குப் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340776®=3&lang=1
****
TV/PD/SH