குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் காப்பதில் மக்களின் கடமைகளும் முக்கியம் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதா கிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 2:35PM by PIB Chennai

இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல எனவும் அது நாட்டின் வழிகாட்டும் நெறியாகும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுதில்லியில், பென்னட் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளி நடத்திய
5-வது அரசியல் சாசன வார விழாவை தொடங்கி வைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அரசியல் சாசன மாண்புகள் அரசு அமைப்புகளுடன் நின்றுவிடாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இடம்பெற வேண்டும் என்று அவர் கூறினார். ஜனநாயகம் சிறக்க அரசு அமைப்புகள் பொறுப்புடன் செயல்படுவதும், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளிப்பதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். உரிமைகளைப் போலவே மக்களின் கடமைகளும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

அம்பேத்கர் கண்ட ஜனநாயகக் கொள்கைகளை நினைவுகூர்ந்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஏழைகளுக்கு 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனவும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவது 82 சதவீதத்தைக் கடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு  நரேந்திர மோடியின் தலைமையில் இவை நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.

அரசியலமைப்புச் சபையில் இடம்பெற்ற 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் வழிவகுப்பதாகத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21-வது பிரிவு கண்ணியம், கல்வி, சுகாதாரம், தனியுரிமை உள்ளிட்ட உரிமைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கை வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கம் சிறந்த வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பம் மனிதகுலத்தின் நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  மாணவர்கள் பொறுப்புள்ள நபர்களாக உருவாகி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கப் பங்களிக்க வேண்டும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338981&reg=3&lang=1

----

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339308) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam