பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

53-வது பிரகதி கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார் - ஆறு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 8:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, செயலூக்கமான ஆளுகை மற்றும் உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கான, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பல்முனைத் தளமான பிரகதி-ன் 53-வது கூட்டத்திற்கு இன்று (25.08.2026) தலைமை வகித்தார்.

கூட்டத்தின் போது, ​​பிரதமர், ஒன்பது மாநிலங்களில், ரூ.30,000 கோடிக்கும் அதிகமான மொத்தச் செலவில் செயல்படுத்தப்படும் ரயில்வே, சாலை, மின்சாரத் துறைகளைச் சார்ந்த ஆறு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்தார். போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதற்கும், தொழில்துறை, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். உரிய காலத்திற்குள் இவற்றை நிறைவேற்றுதல், முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, நிலுவையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றிற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஆய்வு நடத்தப்பட்டது.

உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், செலவு அதிகரிப்பையும் தாண்டி, மக்கள், வணிகங்கள், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கிடைக்க வேண்டிய பலன்களைத் தாமதப்படுத்துகின்றன என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தனித்தனிப் பிரிவுகளாகவோ, பகுதிகளாகவோ அல்லது தொகுப்புகளாகவோ கருதாமல், ஒரு ஒருங்கிணைந்த அம்சமாகக் கருதி கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். தனிப்பட்ட தொகுப்புகளில் ஏற்படும் முன்னேற்றம், இறுதியில் முழுத் திட்டத்தையும் உரிய நேரத்தில் முடித்துச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே, அமைச்சகங்களும் மாநில அரசுகளும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும், தாமதப்படுத்தக்கூடிய இடைவெளிகளைக் களையவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சகங்களும் மாநில அரசுகளும் செயலூக்கமான பணி கலாச்சாரத்தை வளர்க்க அவர் அழைப்பு விடுத்தார்.

முக்கியப் போக்குவரத்து, உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடும்போது, ​​சாத்தியமான இடங்களில் உள்கட்டமைப்புச் சேவைகளுக்கான பொதுப் பயன்பாட்டு வழித்தடங்களை ஆராய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடல் கட்டத்திலேயே அவற்றை ஆய்வு செய்யுமாறு அமைச்சகங்களையும் மாநில அரசுகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

செயலாக்க வேகத்துடன் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்க கூடாது என்று பிரதமர் கூறினார். அமைச்சகங்கள், மாநிலங்கள், செயல்படுத்தும் முகமைகள் ஆகியவை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், ஒவ்வொரு கட்டத்திலும் தர உறுதியையும் மேற்பார்வையையும் வலுப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

டிஜிட்டல் வேளாண் திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது, ​​வேளாண் தரவுகளிலிருந்து அதிகப் பயனைப் பெறுவதற்கு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். உள்ளீட்டுத் திட்டமிடல் முதல் பதனப்படுத்துதல் வரை, வேளாண் வணிக நடவடிக்கைகள் முழுவதும் இந்தத் தரவுச் சூழலமைப்பைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றும், இது மேலும் தகவலறிந்த தலையீடுகள், இலக்கு நிர்ணயம், தரவு சார்ந்த முடிவெடுத்தல் ஆகியவற்றைச் சாத்தியமாக்கும் என்றும் அவர் கூறினார். அக்ரிஸ்டேக் சூழலமைப்பை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும், விவசாயிகளுக்குச் சிறந்த பலன்களை வழங்குவதற்காக அதன் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இணையவழி மோசடி குறித்து அவர் ஆய்வு செய்தபோது, ​​பயிற்சி, விழிப்புணர்வு, கல்வி ஆகியவற்றில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலம் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.  டிஜிட்டல் நடைமுறைகள் குறித்து மூத்த குடிமக்கள், இளைஞர்கள், பிற பிரிவினருக்கு கற்பிக்கும் வகையில், தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், புதிதாக உருவாகும் இணையவழி மோசடி முறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்குத் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி  கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303329&reg=3&lang=1

***

SS/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2339131) வருகையாளர் எண்ணிக்கை : 9