இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 1:26PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள 13 விளையாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. விளையாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நிபுணத்துவம், வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், விளையாட்டுக் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்த ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆராய்ச்சி, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் கூடிய, ஒருங்கிணைந்த மையங்களாக விளையாட்டுப் பல்கலைக்கழகங்களை மாற்றுவதே நமது தொலைநோக்குப் பார்வை என்று அமைச்சர் கூறினார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறிப்பிட்ட விளையாட்டு, பயிற்சி, விளையாட்டு அறிவியல், விளையாட்டுச் சட்டம், விளையாட்டுச் சுற்றுலா ஆகிய துறைகளில் தனித்துவமான நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்கு இடையே பயிற்சியாளர்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் முத்திரை பதித்து முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே, விளையாட்டுத் துறை செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337816®=3&lang=1
***
SK/PD/PS