இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 12:35PM by PIB Chennai
புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 137 வகையான மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இந்த மருந்துகளுக்கான விற்பனை லாப வரம்பு முறைப்படுத்தப்பட்டு, திருத்தப்பட்ட விலைகள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ளன.
நவம்பர் 11-ம் தேதி வரை மருந்து நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய விலைப் பட்டியல், என்பிபிஏ இணையதளம், ஃபார்மா சகி தாம் செயலி ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், மருந்துக் கிடங்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை புதிய விலைகளைப் பின்பற்றுவதுடன், திருத்தப்பட்ட விலைப் பட்டியலைத் தங்கள் நிறுவனங்களிலும் இணையதளங்களிலும் பொதுமக்கள் காணும்படி வைக்க வேண்டும்.
மருந்துகளின் விலைக் குறைப்பால் நோயாளிகளுக்குப் பலன் கிடைப்பதை மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், 2013-ம் ஆண்டு மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது, தட்டுப்பாடு அல்லது கிடைக்காமை குறித்த புகார்களை 1800-111-255 என்ற இலவச எண்ணிலும், ஃபார்மா சகி தாம் செயலி அல்லது monitoring-nppa[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாநில அதிகாரிகள் நவம்பர் 16-ம் தேதிக்குள் என்பிபிஏ-விடம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335722®=3&lang=1
***
TV/PLM/SU