ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு (31.03.2031 வரை) தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் வழங்கியது. இந்தத் திட்டம் பெண்கள், பட்டியலின வகுப்பினர், பழங்குடியின மக்கள் தொழில் முனைவோராக உருவெடுக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக இரண்டரை லட்சம் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இது வரை 2,75,000-க்கும் அதிகமான பெண்கள், பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கடன் உத்தரவாத நிதியத்திற்கு ரூ.4,111 கோடி ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் பெண்கள், பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட்டுக் கடன் அல்லது காலமுறை கடனாக நிதியுதவி பெற இந்தத் திட்டம் வகை செய்கிறது. திட்டச் செலவில் 85 சதவீதம் வரை கடன் தொகை பெற முடியும்.
உற்பத்தி, சேவை, வர்த்தகம், விவசாயம் சார்ந்த தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற தகுதியுடையவையாகும். இந்தக் கடன் தொகைக்கு உத்தரவாதத் தொகையாக 0.5 சதவீதம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் பின்தங்கிய சமூகங்களில் தொழில் முனைவோர்களை வலுப்படுத்துவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக அமைகிறது.
***
(Release ID: 2334978)
SS/SV/GS/RJ