உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புவியியல், அரசியல், கலாச்சார ஒருங்கிணைப்பிற்காக சர்தார் வல்லபாய் படேல் முயற்சிகள் மேற்கொண்டதுடன், தேசத்தை ஒன்றிணைத்தார்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 2:09PM by PIB Chennai

இந்தியாவின் புவியியல், அரசியல், கலாச்சார ஒருங்கிணைப்பிற்காக சர்தார் வல்லபாய் படேல் முயற்சிகள் மேற்கொண்டதுடன், தேசத்தை ஒன்றிணைத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில், தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர், நாட்டு மக்களுக்கு ஒற்றுமை தின உறுதிமொழியையும் அவர்  செய்து வைத்தார்.

தில்லி துணைநிலை ஆளுநர், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை, தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடி வருவதாகக் கூறினார்.

சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்ததுடன், அதன் புவிசார் அமைப்பையும் வடிவமைத்த ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

எண்ணற்ற சமஸ்தானங்களையும், அரசப் பகுதிகளையும் ஒன்றிணைக்கும் கடினமான பணியைச் செய்ததன் மூலம், தற்போதுள்ள ஒருங்கிணைந்த இந்தியாவின் வரைபடத்தை சர்தார் படேல் உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா சிதைந்துவிடும் என்று உலக நாடுகள் கணித்ததாகக் குறிப்பிட்ட திரு அமித் ஷா, சுதந்திரத்திற்குப் பிந்தைய 1,218 நாட்களுக்குள், பலரும் சாத்தியமற்றது என்று கருதிய ஒருங்கிணைந்த இந்தியாவை சர்தார் படேல் உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகக் கூறினார். தற்போது, சர்தார் படேல் கனவு கண்ட இந்தியா, உலக அரங்கில் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியன்று, நக்சல் தீவிரவாதத்திலிருந்து நாடு விடுபட்டுள்ளது என்றும், தற்போது போதைப்பொருள் இல்லாத நாடாக உருவெடுக்கும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான அடிப்படை நிலை என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில், காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைக்கும் வகையில், 370-வது பிரிவை நீக்கியது, நக்சல் தீவிரவாதத்தை ஒழித்தது, ஒருங்கிணைந்த வரி முறையை அமல்படுத்தியது போன்ற முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் இளைஞர்களுக்கும், எதிர்காலத்திற்கும் பெருமளவிலான  நன்மை அளிக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330810®=3&lang=1

(Release ID: 2330810)

****

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330926) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam