இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 3:02PM by PIB Chennai
கிராமப்புறங்களின் முழுமையான மேம்பாட்டின் வாயிலாக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட முடியும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா, 39-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். நாட்டு மக்களின் உண்மையான வலிமை கிராமப்புறங்களில் உள்ளது என்றும், கிராமப்புற மேம்பாடு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, நகர்புறங்களுக்கு இணையான தரமான உள்கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமான பொதுச் சேவைகள், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள், கண்ணியமான வாழ்க்கைத்தரம் ஆகியவை உறுதி செய்யப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்குத் தற்சார்பு, சமூகச் சேவை குறித்த காந்தியக் கொள்கைகள் அவசியமானவை என்று அவர் கூறினார். வாய்மை, அகிம்சையின் வலிமையை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், காந்தியடிகள் ஆங்கிலேயே ஆட்சியை அறவழியில் போராடி நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்ததை சுட்டிக்காட்டினார். காந்தியடிகளின் சிந்தனைகள் நாட்டிற்கும், சமூகத்திற்கும், இன்றளவும் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் கிராமப்புறங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் கூறினார். வீட்டுவசதி, குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள், சுகாதாரம், விவசாயம், டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு கிராமமும் சாலை, போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் மூலம் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் இதன்மூலம் கல்வி, சுகாதாரம், சந்தை வாய்ப்புகள், வேலைவாய்ப்பு ஆகியவை கிராமப்புற மக்களை சென்றடையச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தூய்மை இந்தியா இயக்கம் மக்களிடையே தூய்மைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், பொது இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதில் மக்களின் பங்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நலன் நாட்டின் உணவு பாதுகாப்புடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வருவாயை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் போதைப்பொருளை சார்ந்திருப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர், சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப்பொருள் பயன்பாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் தூதுவர்களாக திகழ வேண்டும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
முன்னதாக இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆன்மீகம், தமிழ் இலக்கியம் பண்பாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களையும் குடியரசு துணைத்தலைவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330383®=48&lang=1
***
SS/SV/SU/PS