PIB Backgrounder
azadi ka amrit mahotsav

2027-28 ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், வெளிப்படையான கொள்முதலை உறுதி செய்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 11:06AM by PIB Chennai

விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான விலை உத்தரவாதத்தை அளிப்பதிலும், அவர்களின் வேளாண் முதலீடுகளைப் பாதுகாப்பதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் மிக முக்கிய கொள்கை முடிவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2027-28-ம் ஆண்டின் ரபி சந்தைப் பருவத்திற்கான அனைத்து அத்தியாவசிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க மத்திய அரசு 2026 செப்டம்பர் 30 அன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 324 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு சுமார் ரூ.90,962 கோடி நேரடியாக வழங்கப்படவுள்ளது. 2004-05 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் ஆறு முக்கிய ரபி பயிர்களின் கொள்முதல் அளவு 2,302 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் இது 3,921 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவு விலைத்தொகை ரூ.2.65 லட்சம் கோடியிலிருந்து, ரூ.8.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

விவசாயச் செலவுகள், விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் 22 வகையான பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்து வருகிறது. பயிர் சாகுபடிச் செலவு, சந்தை வரத்து, உள்நாட்டு, சர்வதேச சந்தை நிலவரங்கள், விவசாயமல்லாத பிற துறைகளுடனான வர்த்தகச் சமநிலை ஆகிய பல்வேறு காரணிகளை ஆராய்ந்து, சாகுபடிச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீத கூடுதல் லாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் மனித உழைப்பு, கால்நடைகள், இயந்திரங்களுக்கான வாடகை, நிலத்திற்கான குத்தகை, விதைகள், உரங்கள், பாசனச் செலவுகள், உழவு உபகரணங்களின் தேய்மானம், குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

2027-28 ரபி சந்தைப் பருவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில், அதிகபட்சமாக குங்குமப்பூவுக்கு குவிண்டாலுக்கு ரூ.675 உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடுகுக்கு ரூ.413, மசூர் பருப்புக்கு ரூ.390, பார்லிக்கு ரூ.136 உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவை ஒப்பிடுகையில், கோதுமைக்கு அதிகபட்சமாக 106 சதவீதமும், கடுகுக்கு 96 சதவீதமும், மசூருக்கு 92 சதவீதமும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நியாயமான வருவாயை உறுதி செய்வதுடன், பயிர் சாகுபடியில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும்.

தானியங்கள், சிறுதானியங்களை இந்திய உணவுக் கழகமும், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பிரதமரின் விவசாயிகள் வருவாய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் நாஃபெட், தேசிய நுகர்வோர் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கின்றன. இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இ-சம்ரித்தி, இ-சம்யுக்தி போன்ற பிரத்யேக டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விவசாயிகள் பதிவு செய்து, வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுகிறது. கொள்முதல் நடைமுறைகளில், தகுதியான விவசாயிகளை உறுதி செய்ய கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அறிவியல் ரீதியான பயிர் சாகுபடி முறைகள், அரசின் ஆதரவு, நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அரசின் உறுதிப்பாட்டுக்கு சான்றுகளாகத் திகழ்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329868&reg=3&lang=1

***

SS/PD/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2330019) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Bengali-TR , Gujarati