பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸில் சுவாமிநாராயண் இந்து கோவில் திறப்பு விழாவில் பிரதமர் காணொலி வாயிலாக நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 11:33PM by PIB Chennai

மரியாதைக்குரிய மகந்த் சுவாமிஜி அவர்களே,

பிரான்ஸ் அரசின் மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

சிறப்பு விருந்தினர்களே,

இந்திய சமூகத்தைச் சேர்ந்த அன்புக்குரியவர்களே,

உலகம் முழுவதும் இருந்து இந்த நிகழ்வில் இணைந்துள்ள ஹரி பக்தர்களே,

அன்புடையீர் அனைவருக்கும் — ஜெய் சுவாமிநாராயண்!

இன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், மிகப் பிரம்மாண்டமான சுவாமிநாராயண் கோவில் திறந்து வைக்கப்படுகிறது. இந்தத் திறப்பு விழா, இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான கலாச்சார உறவில் ஒரு புதிய முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. மரியாதைக்குரிய துறவிகளின் ஆசீர்வாதத்துடனும், சனாதன பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்த்து வரும் பெரியோர்களின் உயர்ந்த நோக்கத்துடனும், இன்று நடைபெறும் இந்தத் திறப்பு விழா, “வசுதைவ குடும்பகம்” — “உலகம் ஒரே குடும்பம்” என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. பகவான் சுவாமிநாராயணரின் அருளாலும், நமது துறவிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களாலும், இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளுடன் தொடர்ந்து இணைந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பது எனது பெரும் பாக்கியமாகும். இன்றும் நான் உடலளவில் பாரிஸில் உங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், என் மனதாலும் இதயத்தாலும் நான் உங்கள் அருகிலேயே இருப்பதாக உணர்கிறேன்.

நண்பர்களே,

இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில், பரம பூஜ்ய பிரமுக் சுவாமி மகாராஜ் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். பண்டைய காலங்களில் இந்தியாவின் கலாச்சாரமும் ஆன்மிகப் பெருமையும் மிகப் பெரியதாக இருந்தது. அந்தப் பெருமையை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்கான ஒரு மிகப்பெரிய இயக்கத்தை அவர் தொடங்கினார். இன்று அந்த ஒளி ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. 2024ஆம் ஆண்டு அபுதாபியில் பிரம்மாண்டமான கோவில் திறந்து வைக்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இப்போது பாரிஸிலும் சுவாமிநாராயண் கோவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் புனிதமான கட்டுமானப் பணிகள், நமது துறவிகளின் உறுதியையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன. இந்தப் புனிதப் பணிக்காக பூஜ்ய மகந்த் சுவாமிஜி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது திருவடிகளில் நான் பணிவுடன் வணங்குகிறேன். இந்தச் சிறப்பான தருணத்தில் பிஏபிஎஸ் சுவாமிநாராயண் அமைப்பினருக்கும், கோடிக்கணக்கான ஹரி பக்தர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

பிஏபிஎஸ் அமைப்பின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் கோவில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும் போதெல்லாம், இந்தியாவின் பண்டைய சிந்தனைகளும் மனிதநேய மதிப்புகளும் அந்தக் கோவில்களுடன் சேர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கின்றன. இந்தியாவின் சிந்தனை கூறுவது: “ஸமானம் மனஃ ஸஹ சித்தமேஷாம்” — நமது எண்ணங்கள் ஒன்றுபடட்டும்; நமது இதயங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கட்டும். எனவே, இன்று பிரான்ஸில் இவ்வளவு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், அது பிரான்ஸின் பன்முகத்தன்மையை மேலும் வளப்படுத்தும். அதே நேரத்தில், இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளுக்கும் இது புதிய ஆற்றலை வழங்கும்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா–பிரான்ஸ் உறவுகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. எனது நண்பர் அதிபர் மேக்ரோன் அவர்களுடன் இணைந்து, இரு நாடுகளும் சிறப்பு உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பாதுகாப்புத் துறை முதல் விண்வெளி மற்றும் காலநிலை நடவடிக்கைகள் வரை, நாம் புதிய வேகத்துடனும் புதிய ஆற்றலுடனும் முன்னேறி வருகிறோம். மேலும், 2026ஆம் ஆண்டை இந்தியா–பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த உத்திசார் கூட்டாண்மை சிறப்பானது. ஏனெனில், இது நமது இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் வலுவான கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாறே இதற்கு சாட்சி. பிரான்ஸ் நாட்டில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள் இன்றும் நினைவுச் சின்னங்களில் உயிர்ப்புடன் உள்ளன. மொழிகளில் ஆர்வம் கொண்டவர்கள், சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் முக்கியப் பங்கு வகித்ததை நன்கு அறிவார்கள். ரொமைன் ரோலான் அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய நூல்கள், நமது இரு சமூகங்களையும் மேலும் நெருக்கமாகக் கொண்டுவந்தன. பாரிஸிலிருந்து புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் வரை, அன்னை அவர்களின் ஆன்மிகப் பயணம் எண்ணற்ற இந்திய மற்றும் பிரெஞ்சு ஆன்மிகவாதிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

நண்பர்களே,

பல தசாப்தங்களுக்கு முன்பு ஸ்ரீல பிரபுபாத சுவாமிஜியும் பிரான்ஸுக்கு வந்தார். இஸ்கான் அமைப்பின் மூலம், இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ஆன்மிக உறவில் அவர் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். இன்று யோகாவும் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான மக்களுக்கிடையேயான தொடர்புக்கு ஒரு முக்கியமான ஊடகமாக மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று, ஈஃபில் கோபுரத்தின் முன்பாக நடைபெறும் யோகா நிகழ்வுகளின் படங்கள், பிரான்ஸில் யோகா எந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இப்போது இந்தப் பிரம்மாண்டமான பிஏபிஎஸ் கோவிலின் மூலம், நமது கலாச்சார உறவில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் இணைக்கப்படுகிறது.

நண்பர்களே,

இந்த நாட்களில் இந்தியா–பிரான்ஸ் கூட்டு முயற்சிகள் மற்றும் கூட்டுத் திட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சுவாமிநாராயண் கோவில், இந்தக் கூட்டாண்மைக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இந்தக் கோவில் “இந்தியாவில் உருவாக்கப்பட்டது” மற்றும் “பிரான்ஸில் கட்டப்பட்டது” . இந்தக் கோவிலின் பல கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டன. இந்தியாவின் பண்டைய கைவினைக் கலை, பிரான்ஸின் நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் இங்கு இணைந்துள்ளது. இதன் மூலம் பாரிஸில் இந்தப் பிரம்மாண்டமான கோவில் உருவாகியுள்ளது. எனவே, இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் புதிய வாய்ப்புகளின் அடையாளமாக இந்தக் கோவில் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சுவாமிநாராயண் கோவில்கள் எப்போதும் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இருந்ததில்லை. அவை சேவை மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கோவிலும் பல்வேறு சேவைத் திட்டங்களுக்கான மையமாக மாறும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இந்திய கலாச்சாரத்தின் குரல்கள் எதிர்காலத்தில் ஐரோப்பா முழுவதும் ஒலிக்கும் என்றும், அவை அங்குள்ள மக்களுக்கு பயனளிக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்தக் கோவிலுக்கு நேரில் வந்து தரிசனம் செய்ய நான் நிச்சயமாக முயற்சி செய்வேன். இந்த வார்த்தைகளுடன், மீண்டும் ஒருமுறை இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைத்து விருந்தினர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும், அனைத்து ஹரி பக்தர்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி!

ஜெய் சுவாமி நாராயண்

***

(Release ID: 2307272)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327322) வருகையாளர் எண்ணிக்கை : 3