பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் அன்னபூர்ணா திட்டத்தின் தவணைத் தொகை வெளியீட்டு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 2:23PM by PIB Chennai

வணக்கம்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனைத்து தாய்மார்களுக்கும் எனது மரியாதையையும் அன்பான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் உங்கள் அனைவருடனும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடமிருந்து எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அன்பும் எனக்கு மிகப்பெரிய பலமாக உள்ளன.

இன்றைய நாள் விஸ்வகர்மா பூஜையின் புனிதமான நாளாகவும் அமைந்துள்ளது. விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த புனிதமான நேரத்தில், மேற்கு வங்கத்தில் ஒரு புதிய மரபு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று, அன்னபூர்ணா திட்டத்தின் மூலம் மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுடன் புதிய அதிகாரமளிக்கும் நடவடிக்கை இணைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் ஒவ்வொரு சகோதரிக்கும் எனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது வீடுகளில் தாய்மார்களும் சகோதரிகளும் பல்வேறு பொறுப்புகளைச் சுமந்து வருகின்றனர். ஏராளமான சிறிய மற்றும் பெரிய முடிவுகளுக்கு இடையே, ஒரு பெண் குடும்பத்தை அனைத்து வகையிலும் கவனித்துக் கொள்கிறார். அத்தியாவசியச் செலவுகள் குறித்த கவலை அவருக்கு குறையும் போது, அவரது தன்னம்பிக்கையும் மேலும் அதிகரிக்கிறது. மேற்கு வங்க பெண்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் இத்தகைய முக்கியமான முயற்சிதான் அன்னபூர்ணா திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை மேற்கு வங்கத்தின் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்கிறது. அந்தத் தொகையைப் பெறுவதற்காக அவர்கள் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அவர்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய ஆதரவாக உள்ளது.

நண்பர்களே,

இன்று அன்னபூர்ணா திட்டத்தின் நான்காவது தவணைத் தொகை, கிட்டத்தட்ட 1.5 கோடி சகோதரிகளின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 கிடைக்கிறது. ஒரு தாயைப் பொறுத்தவரை, இந்தத் தொகை தனது குழந்தையின் கல்விச் செலவாக இருக்கலாம். ஒரு சகோதரியைப் பொறுத்தவரை, மருந்து வாங்குவதற்கோ அல்லது அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கோ இது உதவியாக இருக்கலாம்.

நண்பர்களே,

மேற்கு வங்கத்தின் பெண்கள் தங்களது முடிவுகளைத் தாங்களே எடுக்கும் அதிகாரத்தையும், முன்னேறிச் செல்லும் துணிச்சலையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வை. இதில் அன்னபூர்ணா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்னபூர்ணா திட்டத்தின் பயனாளிகளாக உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த ஆண்டு மே 4ம் தேதி, மேற்கு வங்க மக்கள் மாற்றத்திற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாற்றத்தில் மேற்கு வங்கத்தின் தாய்மார்களும் சகோதரிகளும்தான் மிக முக்கியமான பங்காற்றியுள்ளனர் என்பதை நான் அறிவேன். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். பல விஷயங்களுக்காக நீங்கள் காத்திருந்திருக்கிறீர்கள். எனவே, எங்களது புதிய அரசுக்கு முன்பிருந்த முதல் சவால், மேற்கு வங்கப் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், அவர்களின் வாழ்வில் வசதியை அதிகரிப்பதுமாகும். அதனால்தான் நாங்கள் ஏற்றுக்கொண்ட வழிகாட்டும் தாரக மந்திரம் - “பேச்சு குறைவு, பணி அதிகம்” என்பதாகும்.

நண்பர்களே,

அன்னபூர்ணா திட்டம் இந்தச் சிந்தனையுடன்தான் தொடங்கப்பட்டது. புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இன்று ஏராளமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடைகிறது. எந்த இடைத்தரகர்களுக்கும் பணம் வழங்க வேண்டியதில்லை; எந்தப் பகுதியும் பிடித்தம் செய்யப்படுவதில்லை!

அன்னபூர்ணா திட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதியுள்ள ஒரு பெண் கூட விடுபடக் கூடாது என்பதே எங்கள் அரசின் நோக்கம். இதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கைப் பயணத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பது பாஜகவின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தாய்மார்களுக்கு மரியாதை  அளிக்கும் திட்டத்தை தொடங்கி, பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடையச் செய்தோம். கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்குக் கல்வி அளிப்போம்’ போன்ற மக்கள் இயக்கங்களைத் தொடங்கினோம். கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக, லட்சக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டினோம். அவர்களின் கல்வி தொடர்வதற்காக, பெண் குழந்தை செல்வ வளத்திட்டத்தில் அதிக வட்டி வழங்கினோம். பெண் குழந்தைகள் சைனிக் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அந்தப் பள்ளிகளின் கதவுகளை அவர்களுக்காகத் திறந்தோம். பெண் குழந்தைகள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு உதவும் வகையில், பிணையில்லா கடன்களை வழங்கும் முத்ரா திட்டத்தை தொடங்கினோம். பிரசவத்துக்குப் பிறகும் தாய்மார்கள் தங்களது வேலைகளைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, மகப்பேறு விடுப்பு காலத்தை அதிகரித்தோம். கிராமப்புறங்களில் புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, சுயஉதவிக் குழுக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஆதரவு வழங்கினோம். சமையலறையில் புகையால் அவதிப்படுவதிலிருந்து பெண்களை விடுவிப்பதற்காக, இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினோம். தண்ணீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்லும் சிரமத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர்’ திட்டத்தை தொடங்கினோம். இருளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, சௌபாக்யா திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்புகளை வழங்கினோம். பண வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை மறைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, மருத்துவ காப்பீட்டு அட்டை மூலம் அவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை வழங்கினோம். பெண் குழந்தைகளும் வங்கிச் சேவைகளைப் பெற வேண்டும் என்பதற்காக, மக்கள் வங்கித் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகளைத் தொடங்கினோம். பெண் குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகளில் கூட்டுரிமையை உறுதி செய்தோம்.

நண்பர்களே,

கடந்த 12 ஆண்டுகளில் பல மத்திய அரசின் திட்டங்கள் மேற்கு வங்கத்துக்கு உரிய காலத்தில் கிடைக்காதது அம்மாநிலத்தின் மிகப்பெரிய வேதனைகளில் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது பாஜக அரசு அமைந்துள்ள நிலையில், தடைபட்டிருந்த இந்தத் திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமைந்த பிறகு, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகளைப் பெறுவதற்காக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதமரின் விஸ்வகர்மா திட்டமும் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஒவ்வொரு திட்டமும், தடைபட்டுள்ள ஒவ்வொரு திட்டப்பணியும் தற்போது மேற்கு வங்கத்தில் புதிய வேகத்தைப் பெற்று வருகின்றன. இதற்காக மேற்கு வங்கத்தின் பெண்களும் மக்களும் பாஜகவுக்கு தங்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கி வருகின்றனர். அதனால்தான் நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன் - ஒன்றிணைந்து புதிய மேற்கு வங்கத்தை உருவாக்குவோம்.

நண்பர்களே,

நாடு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை எடுத்துள்ளது. இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு மேற்கு வங்கத்தின் தாய்மார்களும் சகோதரிகளும் தொடர்ந்து புதிய வேகத்தை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வளர்ச்சியடைந்த மேற்கு வங்கத்தின் வலிமையுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் உறுதிமொழி மேலும் வலுப்பெறும்.

நண்பர்களே,

உங்களது அன்பும், உங்களது ஆசீர்வாதமும் தொடர்ந்து எங்களை மக்கள் சேவையில் ஈடுபட ஊக்குவித்து வருகின்றன. மீண்டும் ஒருமுறை, அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வகர்மா பூஜை நல்வாழ்த்துக்கள்! நன்றி!

***

(Release ID: 2311304)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327179) வருகையாளர் எண்ணிக்கை : 13