பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் வணிக மன்றம் 2026-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 7:05PM by PIB Chennai

மாண்புமிகு பெருமக்களே,

பிரிக்ஸ் வணிகச் சமூகத்தின் தலைவர்களே,

புதுமை கண்டுபிடிப்பாளர்களே மற்றும் நண்பர்களே,

வணக்கம்!

பிரிக்ஸ் வணிக மன்றத்திற்கு  உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த ஆண்டு, நாம் பிரிக்ஸ் அமைப்பின் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த அமைப்பு 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இதில் நான்கு நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இன்று, பிரிக்ஸ் மற்றும் அதன் தோழமை நாடுகளுடன் சேர்த்து, 21 நாடுகளைக் கொண்ட ஒரு குடும்பமாக மாறியுள்ளது.

இன்று, பிரிக்ஸ் நாடுகள் உலகின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்தையும், உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை வகிக்கின்றன. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில், உலகளாவிய ஜிடிபி ஏறத்தாழ 2.5 மடங்கு வளர்ந்துள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு ஜிடிபி ஏறத்தாழ 4.5 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார வலிமையானது உலகப் பொருளாதாரத்தின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் உலகளாவிய புதுமை மற்றும் தீர்வுகளுக்கான முக்கிய மையங்களாகவும் உருவெடுத்து வருகின்றன. அடித்தட்டு அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை, நமது நாடுகள் முழுவதும் புதுமைக்கான புதிய சாத்தியக்கூறுகள் வடிவம் பெற்று வருகின்றன. பிரிக்ஸின் வளர்ந்து வரும் அளவு, வேகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை நம்மிடையே தெளிவாகத் தெரிகின்றன. இந்தியாவில் நடைபெறும் இந்த அரங்கு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பிரிக்ஸ் வணிக மன்றம் ஆகும்.

நண்பர்களே,

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருள் “மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குதல்” என்பதாகும்.

கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியா இந்தக் கொள்கையைத் தனது பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் திறனுடன், எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் துறைகளிலும் தனது வர்த்தக மற்றும் விநியோக முறைகளை இந்தியா மிகவும் பாதுகாப்பானதாகவும், பல வழிகளில் விரிவுபடுத்தப்பட்டதாகவும் மாற்றியுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார ஸ்திரத்தன்மை அற்ற சூழல் நிலவும் இந்தக் காலத்திலும், உலகிற்கே நிலையான வளர்ச்சி மீதான நம்பிக்கையை இந்தியா வழங்க இந்தத் திறனே முக்கியக் காரணமாக உள்ளது.

நாம் நமது சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மிக விரைவாக விரிவுபடுத்தி வருகிறோம். அதே நேரத்தில், கப்பல் கட்டும் துறை, செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம், அரிதான கனிமங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதிய திறன்களைக் கட்டமைத்து வருகிறோம். இத்துறைகளில், உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்தியா புதிய வாய்ப்புகளின் மையமாக உருவெடுத்து வருகிறது. எனவே, இந்தியாவில் தயாரிப்பீர், இந்தியாவுடன் இணைந்து புதுமைகளைக் கண்டறியுங்கள், உலகிற்காக உற்பத்தித் திறனை விரிவாக்குங்கள்.

நண்பர்களே,

இன்று இந்தியா ஒரு புத்தொழில் நிறுவன புரட்சியைக் கண்டு வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களுடன், உலகளாவிய தீர்வுகளுக்கான மையமாக இந்தியா உருவாகி வருகிறது. 'பிரிக்ஸ் இந்தியா புதுமை கண்டுபிடிப்பு கண்காட்சியில் இதுகுறித்த ஒரு முன்னோட்டத்தை காண முடியும்.

நமது புத்தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மாற்றி அமைத்து வருவதுடன், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பேட்டரிகள் துறைகளில் பணியாற்றி வருகின்றன; மேலும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் புதிய எல்லைகளைத் தொட்டு வருகின்றன. இப்போது, பிரிக்ஸ் அமைப்பு மூலமாகவும், உலகத் தரம் வாய்ந்த இந்தப் புதுமைகளை நாம் உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

நண்பர்களே,

இந்தியாவின் புதுமைப் பயணத்தின் மற்றொரு தனித்துவமான அம்சம், மக்கள்தொகை அளவில் புதுமை என்பதாகும். இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண முறை (யுபிஐ) மக்கள்தொகை அளவில் நிதி உள்ளடக்கத்திற்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இன்று, உலகின் நிகழ்நேரப் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றன. இந்த டிஜிட்டல் தளத்தின் மீது புதிய தீர்வுகளை உருவாக்குவதற்காக, நாம் தொழில்துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு திறந்தவெளிச் சூழலை வழங்கியுள்ளோம். இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த இந்தச் சூழலை பல நாடுகள் பின்பற்றி வருவது நமக்குப் பெருமை அளிக்கிறது. பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த புதுமை கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் நாடுகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்க இந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நண்பர்களே,

இன்று உலகம் முழுவதும் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வரும் வேளையில், இந்தியா பொருளாதார பாலங்களை உருவாக்கி வருகிறது. 2014ம் ஆண்டு முதல், நாம் உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். பிரிக்ஸ் அமைப்பிற்குள்ளும் நமது அணுகுமுறை இதே போன்றதுதான்; அதாவது தடைகளைக் குறைத்து வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதாகும்.

எனவே, எங்களது தலைமைத்துவத்தின் கீழ், விவசாயம், சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் கிரிடுகள் போன்ற துறைகளில் புதிய ஒத்துழைப்பு வலைப்பின்னல்களை நாம் ஏற்படுத்தியுள்ளோம். தொடக்க நிறுவனங்களையும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் சந்தைகள் மற்றும் நிதியுதவியுடன் இணைப்பதற்காக, பிரிக்ஸ் இன்குபேட்டர் நெட்வொர்க் பிரிக்ஸ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போர்ட்டல் மற்றும் பிரிக்ஸ் தொடக்க நிறுவன புதுமை நிதி போன்ற முன்னெடுப்புகளை நாம் தொடங்கியுள்ளோம்.

நீங்கள் அனைவரும் இந்த ஒத்துழைப்புச் சட்டகங்களிலிருந்து பயனடையலாம் மற்றும் நமது நாடுகளுக்கு இடையே முதலீடு மற்றும் திறமையாளர்களின் பரிமாற்றத்தை மேலும் அதிகரிக்கலாம்.

நண்பர்களே,

கடல் வழிகள் பாதுகாப்பாகவும், விநியோகப் பாதைகள் தடையின்றியும், மாலுமிகள் பாதுகாப்பாகவும் இருந்தால்தான் உலகளாவிய வர்த்தகம் முன்னோக்கிச் செல்ல முடியும். அதனால்தான் கடல் வழிப் போக்குவரத்து சுதந்திரத்திற்கும், மாலுமிகளின் பாதுகாப்புக்கும் இந்தியா தீவிரமாக ஆதரவளித்து வருகிறது.

பிரிக்ஸ் மகளிர் வணிகக் கூட்டமைப்பும் நமது தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கியமான பகுதியாகும். பெண் தொழில்முனைவோர் நமது வளர்ச்சிப் பயணத்தை முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கிட்டத்தட்ட 200 பெண் வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

பிரிக்ஸ் அமைப்பு தனது மூன்றாவது பத்தாண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், பிரிக்ஸ் வணிக மன்றம் பின்வருவனவற்றை பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான முக்கிய 10 வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து உங்களால் ஒரு அறிக்கையைத் தயாரிக்க முடியுமா? ஒவ்வொரு ஆண்டும் 100 பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்கள் மற்ற பிரிக்ஸ் சந்தைகளிலும் விரிவடைய நம்மால் உதவ முடியுமா? நமது வர்த்தகங்களுக்கு  இடையே 1,000 புத்தொழில்களை நம்மால் உருவாக்க முடியுமா? இந்த மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் நமது முன்னேற்றத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பிரிக்ஸின் லட்சியத்தைச் செயலாகவும், நமது கூட்டு வலிமையை உலகளாவிய தீர்வுகளாகவும் மாற்றுவோம். பிரிக்ஸ் முன்னோக்கிச் செல்வதுடன், உலகமும் முன்னோக்கிச் செல்ல உதவட்டும்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

***

(Release ID: 2309275)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327161) வருகையாளர் எண்ணிக்கை : 8