பாதுகாப்பு அமைச்சகம்
அமைதியை பராமரிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது:மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 1:08PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர், பாலகோட் விமானப்படைத் தாக்குதல்கள், துல்லியத் தாக்குதல் போன்றவை ராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்ல. அவை, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் இடத்திற்குச் சென்று அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கொண்டு நாட்டின் செயல்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள உறுதியான மாற்றத்தைக் குறிக்கும் அடையாளங்களாக விளங்குகின்றன என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் அக்டோபர் 15, 2026 அன்று நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பாகிஸ்தானிலிருந்து உருவாகும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் வலுவான பதில் நடவடிக்கை இருக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
பேச்சுவார்த்தை, சகவாழ்வு போன்ற அமைதியான வழியில் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இந்தியாவின் கலாச்சார நெறியாக உள்ளது என்றும், அமைதியைக் கடைபிடிப்பதை பலவீனமாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
2014-ம் ஆண்டு முதல், பயங்கரவாத செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றும், பாதுகாப்புப் படைகள் திறம்படப் பணியாற்றி தீவிரவாதிகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அமைதியைப் பராமரிப்பதற்கு வலிமையும், திறனும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியா அமைதியை விரும்பும் போதிலும், நாட்டைப் பாதுகாக்க சில சமயங்களில் போர் புரிவதற்கும் தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அமைதிக்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு வலுவாக உள்ளது என்றும், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளப் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாறிவரும் பாதுகாப்புச் சூழல் குறித்துப் பேசிய அமைச்சர், கலப்பின, உயர் தொழில்நுட்ப, அதிதீவிரப் போர் யுகத்தில், அதிகரித்த விழிப்புணர்வு, பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323733®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324081)
வருகையாளர் எண்ணிக்கை : 8