PIB Backgrounder
தமிழ்நாட்டில் 10 தொழிற்பூங்காக்கள் உட்பட நாடு முழுவதும் 100 தயார்நிலை தொழிற்பூங்காக்களை உருவாக்கும் ரூ.33,660 கோடி மதிப்பில் பவ்யா திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 12:29PM by PIB Chennai
இந்தியாவின் உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், பாரத் தொழில்துறை வளர்ச்சித் திட்டத்தின் (பவ்யா) கீழ், நாடு முழுவதும் 100 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. ரூ.33,660 கோடி மதிப்பிலான இத்திட்டம், நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு, நம்பகமான சேவைகள், விரைவான அனுமதிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், புதிய தொழில் தொடங்குவதற்கான காலத்தைக் குறைக்கும். முதலீடுகளை ஈர்த்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 17 சதவீதம் பங்களிப்பதுடன், 2.7 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. 2035-ம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்த தேசிய உற்பத்தி இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான நிலம், மின்சாரம், நீர், போக்குவரத்து வசதிகள், விரைவான அனுமதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கும் தொழிற்பூங்காக்கள் இந்த இலக்கை அடைய உதவும்.
2026 மார்ச் மாதத்தில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பவ்யா திட்டம், ஏப்ரல் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், தொழிற்சாலைகளுக்கான நிலம், உள்கட்டமைப்பு மற்றும் பிற பொதுவான வசதிகள் ஆகியவை முன்கூட்டியே உருவாக்கப்படும். தயார்நிலையில் உள்ள தொழிற்சாலைக் கட்டடங்கள், சோதனை மற்றும் சான்றளிப்பு வசதிகள், கிடங்குகள், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், மருத்துவ வசதிகள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகியவையும் ஏற்படுத்தப்படும். சாலை, ரயில், கடைசி மைல் சரக்குப் போக்குவரத்து இணைப்பு போன்ற உள்கட்டமைப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் வரை ஒதுக்க முடியும்.
இத்திட்டம் 2026-27 முதல் 2031-32 வரையிலான 6 ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தில், போட்டி அடிப்படையிலான தேர்வு முறையில் 50 தொழிற்பூங்காக்கள் வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் மீதமுள்ள பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 100 பூங்காக்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு பூங்காவும் திட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, 25 முதல் 1,000 ஏக்கர் வரையிலான பரப்பளவைக் கொண்டிருக்கும். திட்டங்களைச் செயல்படுத்தவும், பராமரிக்கவும் சிறப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும். 2026 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட பவ்யா இணையதளம், திட்ட விண்ணப்பங்கள், மதிப்பீடுகள், வெளிப்படையான தேர்வு நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிப் பயணம், தொழிற்பேட்டைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைந்த தொழில்துறை நகரங்களை நோக்கி விரிவடைந்துள்ளது. 2026 பிப்ரவரி நிலவரப்படி, நாட்டில் 370 அறிவிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இந்திய தொழில்துறை நில வங்கியில் 4,164 தொழிற்பூங்காக்கள் வரைபடமிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 10 தொழிற்பூங்காக்கள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதி, ஒருங்கிணைந்த தொழில்துறை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இதன் மூலம், ரூ.97,328 கோடி முதலீட்டு வாய்ப்பும், 6,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவ்யா திட்டம், தொழில் தொடங்குவதற்கான தடைகளைக் குறைத்து, முதலீட்டிலிருந்து உற்பத்திக்கு விரைவாக நகர உதவும். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்புகள் உருவாகி, உலகளாவிய உற்பத்தித் துறையில் இந்தியாவின் பங்கு மேலும் வலுப்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323107®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323454)
வருகையாளர் எண்ணிக்கை : 9