பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 9:08PM by PIB Chennai

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சுமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இவ்வாண்டு ஜூலையில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்த அந்நாட்டுப் பிரதமர் திருமிகு சனே தகாய்ச்சி உடனான விரிவான பேச்சுவார்த்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இச்சந்திப்பின் போது நினைவுகூர்ந்தார். இந்தியா, ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இரு நாடுகளிடையேயான சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் கூட்டு வடிவமைப்பு, கூட்டு உற்பத்தி ஆகியவற்றிற்காக இந்திய நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுடன் ஜப்பான் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர் திரு கொய்சுமி, இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஜப்பான் அரசு உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

----

(Release ID: 2301736)

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316649) வருகையாளர் எண்ணிக்கை : 11