குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

38-வது புனே விழாவை குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

மகாராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் ஆழமான வரலாற்று, கலாச்சார பிணைப்பு உள்ளது : குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

தேசம் தனது வரலாற்றையும், தன் நாயகர்களின் தியாகங்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது : குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 8:02PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (18.09.2026) புனேவில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலா கிரிடா ரங்மஞ்சில் 38-வது புனே விழாவைத் தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, துணை முதலமைச்சர் திருமதி சுனேத்ரா பவார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசம் தனது வரலாற்றையும், அதன் மாவீரர்கள் செய்த பெரும் தியாகங்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் அழியாத பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த அவர், இந்து தர்மத்தையும் இந்தியாவின் நாகரிக பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்பட வேண்டும் என்றார். மேலும், மகாராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான ஆழமான வரலாற்று, கலாச்சார பிணைப்புகளை அவர் எடுத்துரைத்தார். மராட்டியத் தலைவர்களின் காரணமாகவே தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் இலக்கியப் படைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

லோகமான்ய திலக், மகாத்மா ஜோதிபா பூலே, கிராந்திஜோதி சாவித்ரிபாய் பூலே, பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

புனே தனது கலாச்சார அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டே, கல்வி, தொழில், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, சுற்றுலா, தோட்டக்கலை ஆகியவற்றின் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். புனே ஒரு “விழாக்களின் நகரமாக” உருவெடுப்பதில் புனே விழா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாக அவர் பாராட்டினார். மேலும், அதன் நிறுவனர், மறைந்த திரு சுரேஷ் கல்மாடியின் தொலைநோக்குப் பார்வையையும் அவர் பாராட்டினார்.

வளர்ந்து வரும் கலைஞர்கள் மீது இந்த விழா கவனம் செலுத்துவதைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர் உகாவதே தாரே, இந்திரதனு போன்ற நிகழ்ச்சிகளையும் எடுத்துரைத்தார். மேலும், பெண் கலைஞர்கள் தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியதற்காக மஹிளா மகோத்சவத்தையும் அவர் பாராட்டினார்.

இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், வளர்ச்சியானது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு அதனுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் “வளர்ச்சியும், பாரம்பரியமும்” என்ற தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட அவர், நவீனத்துவமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பாரம்பரியங்களோடும் கலாச்சார விழுமியங்களோடும் இணைந்து வர வேண்டும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையானது பொருளாதார வளர்ச்சியையும் உள்கட்டமைப்பையும் மட்டுமல்லாமல், நாகரிகப் பாரம்பரியத்தில் வேரூன்றிய, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகத்தையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார். புனே விழா போன்ற விழாக்கள் கலாச்சாரப் பரிமாற்றம், சுற்றுலா, உள்ளூர் திறமைகள், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று குடியரசு துணை தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். புனே விழாவானது இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டாடி, இளம் திறமையாளர்களை ஊக்குவித்து, பெண்களுக்கு வலுவூட்டி, சுற்றுலாவை மேம்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312224&reg=3&lang=1

***

(Release ID : 2312224)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314182) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati