குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கோர்தந்தாஸ் சேக்சரியா யோகா, கலாச்சார கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
நல்ல மரபுகள் ஒருபோதும் அழிவதில்லை; அவை தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன : குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:42PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலாவின் கைவல்யதாமாவில் உள்ள கோர்தந்தாஸ் சேக்சரியா யோகா, கலாச்சார கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் இன்று (18.09.2026) உரையாற்றினார்.
யோகக் கல்வி, ஆராய்ச்சி, பண்பாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் 75 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்லூரிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
கைவல்யதாமாவை நிறுவிய சுவாமி குவலயானந்தரின் பங்களிப்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், யோகா பெரும்பாலும் ஒரு மாயப் பயிற்சியாகக் கருதப்பட்ட காலத்தில், அவர் அதன் அறிவியல் ஆய்வுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்று கூறினார். கடந்த காலத்தின் மரபுகள் பாதுகாக்கப்பட்டு, வருங்கால சந்ததியினருக்காக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். யோகா ஒரு தலைமுறைக்கானது அல்ல எனவும் அது வரவிருக்கும் ஒவ்வொரு தலைமுறைக்குமானது என்றும் அவர் கூறினார்.
யோகாவிற்கு உலக அளவில் அதிகரித்து வரும் அங்கீகாரத்தை திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்ததோடு, அதன் செய்தியை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடர்ச்சியான முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். இப்போது யோகா பயிற்சிகள், நாடுகள், கலாச்சாரங்கள், சமூகங்களைக் கடந்து பயிற்றுவிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப முன்னேற்றமும் டிஜிட்டல் இணைப்பும் வாழ்க்கையை மேலும் வேகமாக்கியுள்ளதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், சற்று நிதானமாக, கவனம் செலுத்தி, சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை யோகா வழங்குகிறது என்றார். யோகா மனதிற்கும் உடலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுவதோடு, உடல், மன நலனையும் மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
நல்ல நோக்கத்துடனும், சமூகத்தின் நலனுக்கான உண்மையான அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்செல்லும் என்று அவர் கூறினார். நல்ல பாரம்பரியங்கள் ஒருபோதும் அழிவதில்லை எனவும் அவை வரும் தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகமளித்து, பயனளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கைவல்யதாமத்தின் பயணம், இந்த அழியாத உண்மைக்கு ஓர் வாழும் சான்றாக விளங்குகிறது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, முன்னாள் மத்திய அமைச்சரும் கைவல்யதாமா குளோபல் நிறுவனத்தின் தலைவருமான திரு சுரேஷ் பிரபு, கைவல்யதாமா குளோபல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு சுபோத் திவாரி, தலைமைப் புரவலர் திரு ராகேஷ் சேக்சாரியா, பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312071®=3&lang=1
***
(Release ID : 2312071)
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313320)
வருகையாளர் எண்ணிக்கை : 16