குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குன்னூரில் உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தேயிலைத் தொழிலை நவீனமயமாக்கி, ஆராய்ச்சியை வலுப்படுத்தி, இந்திய தேயிலை நிறுவனங்களின் உலகளாவிய சந்தையை விரிவுபடுத்த வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
தொழில் நலனும் தொழிலாளர் நலனும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும் : குடியரசு துணைத் தலைவர்
வலுவான இந்திய தேயிலை பிராண்டுகளை உருவாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 5:19PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடைபெற்ற தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (UPASI) தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்திய தேயிலையை உலகச் சந்தையில் மேலும் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு அதிக அளவிலான ஆராய்ச்சி, தொழில்துறை நவீனமயமாக்கல், தர மேம்பாடு, பிராண்டிங் மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேயிலைத் தொழில், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 100 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், தேயிலைத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் அறக்கட்டளை ஆற்றியுள்ள நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டினார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளில் ஒன்றாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தேயிலைப் பயிரிடுதலுடன் அதன் முறையான பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
தேயிலைத் துறையில் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப தரத்தைப் பராமரிப்பது குறித்து தோட்ட உரிமையாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். உலக தேயிலைச் சந்தை நாளுக்கு நாள் போட்டி மிகுந்ததாக மாறி வருவதால், புதிய அணுகுமுறைகளும் ஆராய்ச்சிகளும் அவசியம் என்றார்.
பிற தேயிலை உற்பத்தி நாடுகளுடனான போட்டியைச் சுட்டிக்காட்டிய அவர், இந்திய தேயிலையை எவ்வாறு சிறப்பாகச் சந்தைப்படுத்துவது, வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, தோட்டத் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தேயிலைத் துறையின் தேவைகளை முறையாக மதிப்பீடு செய்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து உறுதியான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களை உருவாக்குதல், தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தேவையான புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் உலகத் தரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய தேயிலை உற்பத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மொத்த தேயிலை ஏற்றுமதி மற்றும் விற்பனையைத் தாண்டி, வலுவான இந்திய தேயிலை பிராண்டுகளை உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார். நவீன சிந்தனையுடனும், அதிக ஆற்றலுடனும் முன்னேறி, உலகச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஏற்றுமதியாளராக பல்வேறு நாடுகளுக்குச் சென்ற தனது அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு நாடுகளின் தேயிலை பிராண்டுகள் சர்வதேசச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாகவும், இந்திய தேயிலை பிராண்டுகளின் உலகளாவிய வெளிப்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேயிலைத் துறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேயிலைக்கான வலுவான பிராண்டுகளை உருவாக்கி சந்தைப்படுத்த வேண்டும் என்றும் என்றும் அவர் கூறினார்.
உபாசி தனது நூற்றாண்டு விழா ஆண்டை ஒரு நீடித்த சாதனையாக மாற்றும் வகையில், தேயிலை ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கையை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, நவீன உபகரணங்களுடன் அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
தேயிலைத் தொழிலில் தொழிலாளர்களின் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், அவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மருத்துவ ஆலோசனை மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதனைகளை வழங்கும் வகையில் சில மருத்துவ மையங்களை அமைப்பதை உபாசி பரிசீலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
தொழில் நலனும் தொழிலாளர் நலனும் ஒன்றோடொன்று இணைந்து செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேயிலையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், புதிய தயாரிப்புகள், உற்பத்தி முறைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்துறையின் முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்தியா மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாக மட்டுமின்றி, மிகப்பெரிய தேயிலை நுகர்வு நாடுகளில் ஒன்றாகவும் விளங்குவதால், உள்நாட்டுச் சந்தையின் வாய்ப்புகளைத் தொழில்துறை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேயிலைத் துறைக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தேயிலை வாரியம் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், தொழில்துறை சார்பில் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிப்பது அவசியம் என்றார்.தேயிலைத் துறையைச் சேர்ந்த அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி தோட்டங்களையும், தொழிலையும், தேயிலை விற்பனையையும் வலுப்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் “Tea Research in South India – A Compendium” என்ற நூலை வெளியிட்டார். தென்னிந்தியாவில் தேயிலை ஆராய்ச்சியின் பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளை இந்த நூல் தொகுத்து வழங்குகிறது.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன், இந்தியத் தேயிலை வாரியத்தின் துணைத் தலைவர் திரு. சி. முருகன், உபாசி தலைவர் திரு. அஜோய் திப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313066®=3&lang=1
------
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313142)
வருகையாளர் எண்ணிக்கை : 15