குடியரசுத் தலைவர் செயலகம்
சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டின் நிறைவு அமர்வில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு
மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகள் மூலம் பருவநிலை மாற்றத் தாங்குதிறனை வலுப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2026 6:09PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் இன்று (செப்டம்பர் 20, 2026) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்' குறித்த சர்வதேச மாநாட்டின் நிறைவு அமர்வில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பருவநிலை மாற்றம் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளில் சமநிலையின்மையை உருவாக்குகிறது என்றார். பல்லுயிர் இழப்பு, தண்ணீர் பற்றாக்குறை, நிலச் சீரழிவு போன்ற பிரச்சினைகள் அதனுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பருவநிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்வாதாரங்கள் மீதும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
இத்தகைய சிக்கலான சவாலைத் திறம்பட எதிர்கொள்வதற்கு, நன்கு கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் அவசியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இதில் அரசு மட்டுமல்லாமல், பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் சமூகங்களின் தீவிரப் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதில் கிராமப்புற மக்கள், மலைவாழ் சமூகங்கள், சிறு விவசாயிகள், பெண்கள், பிற நலிவடைந்த சமூகங்களின் தேவைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் சமூகங்களின் நடைமுறைகள், வாழ்வியல் அனுபவங்களுடன் இணைந்த பாரம்பரிய அறிவு அமைப்புகள், பருவநிலை மாற்றத் தழுவல் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். பாரம்பரிய அறிவில் வேரூன்றிய, மக்களை மையமாகக் கொண்ட சமூகம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் நாம் பருவநிலை மாற்ற மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டின் கலந்துரையாடல்களும் செயல் திட்டங்களும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய அமைப்புகளைக் கட்டமைப்பதற்கு வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312728®=3&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312766)
வருகையாளர் எண்ணிக்கை : 9