பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கர்மயோகி இயக்கத்தின் கீழ் பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைக்க, திறன் மேம்பாட்டு ஆணையம் மண்டலப் பயிலரங்குகளை நடத்துகிறது
ஆந்திர முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொள்ளும் முதல் பயிலரங்கம், செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் விஜயவாடாவில் நடைபெறுகிறது
இப்பயிலரங்கில் தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:21PM by PIB Chennai
திறன் மேம்பாட்டு ஆணையத்தால் நாடு தழுவிய மண்டல கலந்தாய்வுப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பயிலரங்கத் தொடரானது, மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கத்தின் கீழ் உள்ள பயிற்சி நிறுவனங்களைத் திறன் மேம்பாட்டு நிறுவனங்களாக மாற்றுவதற்காக நடத்தப்படுகிறது. 2026 ஏப்ரல் 2 முதல் 8 வரை கடைபிடிக்கப்பட்ட சாதனா சப்தா 2026 என்ற நிகழ்வு, நாட்டின் மிகப்பெரிய கூட்டுத் திறன் மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாகும். அதைத் தொடரும் வகையில், இந்த பயிலரங்கமானது, நிறுவன சீர்திருத்தம் குறித்த தேசிய உரையாடலை மாநிலங்களுக்கும் அவற்றின் பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த முயல்கிறது. இதன் முதல் பயிலரங்கம், 2026 செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் நடைபெறும்.
பயிற்சி நிறுவனங்கள், எதிர்காலத்திற்குத் தயாரான, மக்களை மையமாகக் கொண்ட குடிமைப் பணியின் அடித்தளமாக விளங்குவதோடு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த ஆண்டில், திறன் மேம்பாட்டு ஆணையம் பிராந்தியப் பணிக் குழுக் கூட்டங்கள், தேசிய உச்சிமாநாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்பாடுகளை மேற்கொண்டது. இவை, பயிற்சி நிறுவனங்கள், மாநில அரசுகள் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைத்தன.
இந்தப் பிராந்தியப் பயிலரங்குகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற வகையில் பயிற்சி நிறுவனங்களின் மாற்றத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஆணையம், மாநிலங்கள், பயிற்சி நிறுவனங்கள், பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடுகிறது. இந்தக் கலந்துரையாடல்கள், நிறுவன ஆளுகை, தலைமைத்துவம், செயல்பாட்டுத் திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தும்.
விஜயவாடாவில் நடைபெறும் முதல் மண்டலப் பயிலரங்கில், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடுவும், மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கும் சிறப்புரையாற்றி சிறப்பிக்க உள்ளனர். இந்தப் பயிலரங்கில் ஒடிசா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், இந்த மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள், பேராசிரியர்களும், துறைசார் நிபுணர்களும், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
விஜயவாடாவில் முதல் பயிலரங்கத்தைத் தொடர்ந்து, இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்து, மாநிலங்கள், பயிற்சி நிறுவனங்களுடனான இந்தக் கூட்டு ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்லும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்குத் தேவையான திறன்களுடன் அரசு ஊழியர்களைத் தயார்படுத்துவதில் மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கத்தின் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312052®=45&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312399)
வருகையாளர் எண்ணிக்கை : 19