குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் நடைபெற்ற ஹைதராபாத் விடுதலை நாள் கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 12:53PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், தெலங்கானாவின் செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற 79-வது ஹைதராபாத் விடுதலை தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹைதராபாத் விடுதலை நாள் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, மாறாக அது தேசத்தைக் கட்டமைக்கும் பயணம், இந்தியாவை ஒன்றிணைத்திருக்கும் மாண்புகள் ஆகியவற்றின் நினைவூட்டல் என்றும் அவர் கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், பிரிவினையிலிருந்து இந்தியா மீண்டு வந்துகொண்டிருந்த அதே வேளையில், நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் சவாலான காலகட்டத்தில், நாட்டின் முதல் உள்துறை  அமைச்சராக சர்தார் படேல் மிக முக்கியப் பொறுப்பை வகித்ததாகக் குறிப்பிட்டார். "சர்தார் படேல் அவர்கள், வலிமையான,  ஒருங்கிணைந்த 'ஒரே இந்தியா’ என்ற கட்டமைப்பிற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தார்," என்று திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்தியாவின் தேசக் கட்டமைப்புப் பணிகளின் பல்வேறு காலகட்டங்களை சுட்டிக்காட்டிய  குடியரசுத் துணைத்தலைவர், "இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் காந்திஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்; சமஸ்தானங்களை நவீன இந்தியாவுடன் ஒன்றிணைப்பதில் சர்தார் படேல் முக்கியப் பங்காற்றினார்; அதேபோல, '2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை’ உருவாக்கும் இலக்கை நோக்கி இந்தியாவை முன்னேற்றும் பணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தற்போது முக்கியப் பங்காற்றி வருகிறார்," என்று குறிப்பிட்டார்.

"அரசியல் ஒருங்கிணைப்பு, பிரதேசங்களை ஒன்றிணைக்கக்கூடும்; ஆனால் அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயகம் குடிமக்களை ஒன்றிணைக்கிறது," என்று கூறிய அவர், புவியியல் அமைப்பால் மட்டுமே தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாது என்றும், சம உரிமைகள், சமமான கண்ணியம், சம வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலமே அதை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய ஆயுதக் காவல் படைகளின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், 1947-48 காலகட்டத்தில் சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும் இந்தப் படைகள் முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டார். தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் ஆயுதக் காவல் படைகள் ஆற்றிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

தொடர்ந்து, போர் நினைவிடத்தைப் பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற அணிவகுப்பு மற்றும் உணர்வுபூர்வமான கலாச்சார நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.

ஹைதராபாத் விடுதலை மற்றும் இந்தியாவுடன் அது இணைக்கப்பட்டதற்கான போராட்டம், தியாகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை எடுத்துரைக்கும் வகையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் அமைத்திருந்த கண்காட்சியையும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311252&reg=3&lang=1

***

TV/BR/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312189) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam