PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்

ரூ.22,919 கோடி மதிப்பீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 12:41PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2014-15-ல் ரூ.1.9 லட்சம் கோடியாக இருந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, 2025-26-ல் ரூ.13.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.38,000 கோடியிலிருந்து ரூ.4.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றம், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி இலக்குகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. அடுத்தகட்டமாக, உள்நாட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரித்தல், உள்நாட்டு மதிப்புக்கூட்டலை மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள், கேமரா, காட்சித் தொகுதிகள், இணைப்பான்கள், மின்தேக்கிகள், லித்தியம்-அயன் மின்கலங்கள், அரிய புவி காந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்களுக்கு இந்தியா பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. இத்திட்டம் மின்னணு உதிரிபாகங்ளுடன் தொடர்புடைய மூலதனப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவு அளிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு மதிப்புக்கூட்டல் அதிகரிப்பதுடன் இறக்குமதிச் சார்பு குறையும்.

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம் 8 ஏப்ரல் 2025 அன்று அறிவிக்கப்பட்டது. ரூ.22,919 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. மூலதனச் செலவுக்கான ஊக்கத்தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 2026-27 மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மின்னணு உதிர்பாகங்கள் உற்பத்திச் சூழல் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

2026 ஆகஸ்ட் நிலவரப்படி 15 மாநிலங்களில் 106 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 30 மின்னணுப் பொருட்கள் சார்ந்த இத்திட்டங்கள் ரூ.69,548 கோடி முதலீட்டை உள்ளடக்கியுள்ளன. ஒப்புதல் பெற்ற 38 உற்பத்தி ஆலைகளில் ஏற்கனவே உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 16 திட்டங்கள் கட்டுமானம் அல்லது இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிநிலைகளில் உள்ளன. ஒப்புதல் பெற்ற திட்டங்கள் மூலம் ரூ.5.34 லட்சம் கோடி மதிப்பிலான உதிரிபாகங்கள் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 74,628 நேரடி வேலைவாய்ப்புகளும் 2.5 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய மின்னணு உதிரிபாகங்கள், மூலப்பொருட்களில் உள்நாட்டு உற்பத்தித் திறன் வலுப்பெற்று வருகிறது. சில பொருட்களின் உற்பத்தித் திறன் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

செமிகான் 1.0 திட்டம் செமிகண்டக்டர், காட்சித் திரை உற்பத்திக்கான விரிவான சூழலை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஜூலை 2026-ல் ரூ.1,27,500 கோடி ஒதுக்கீட்டுடன் செமிகான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டம் (இஎம்சி) பசுமைத் திட்டங்களுக்கு திட்டச் செலவில் 50 சதவீதம் வரை, 100 ஏக்கர் நிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 கோடி நிதியுதவி வழங்குகிறது. கட்டமைக்கப்பட்ட உற்பத்தி அணுகுமுறையை உருவாக்கும் மின்னணு மேம்பாட்டு நிதி முதலீட்டுக்கு ஆதரவு வழங்கி, சந்தை சார்ந்த புத்தாக்கம், தயாரிப்பு வடிவமைப்பு, புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம், இந்தியாவின் மின்னணு உற்பத்தி இலக்குகளை முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் இணைத்து வருகிறது. திட்டங்கள் ஒப்புதல் நிலையிலிருந்து கட்டுமானம், வர்த்தகரீதியான உற்பத்தியை நோக்கி நகரும் நிலையில், உள்நாட்டு மதிப்புக்கூட்டல் அதிகரித்து, உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பு வலுப்பெற்று வருகிறது. 2030-க்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.47.75 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு மின்னணு உற்பத்திச் சூழலையும், ரூ.14.33 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியையும் அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் போட்டித்திறன் மிக்க மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311234&reg=3&lang=1

***

TV/PD/SM  


(வெளியீட்டு அடையாள எண்: 2311970) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Gujarati