குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குவாஹத்தி பல்கலைக்கழகத்தில், ரூ. 110 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 2:24PM by PIB Chennai
குவாஹத்தி பல்கலைக்கழகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்களில், புதிய பல்துறை கல்விசார் கட்டடம், மாணவர்களுக்கான புதிய விடுதி, கலையரங்கம், நூலகம் தொடர்பான பணிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சி பி ராதாகிருஷ்ணன், பாரத ரத்னா கோபிநாத் போர்டோலோய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக, 1948-ம் ஆண்டு ஜனவரி 26-அன்று நிறுவப்பட்ட குவாஹத்தி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுச் சிறப்பை விரிவாக எடுத்துரைத்தார். தேசிய மதிப்பீடு அங்கீகார மன்றத்தின் 'ஏ+' அங்கீகாரம், தேசிய தரவரிசை மதிப்பீடு நிறுவனத்தின் தரவரிசையில் மாநில பொதுப் பல்கலைக்கழகங்களுக்கிடையே 9-வது இடத்தைப் பெற்று, இப்பகுதியின் முன்னணிக் கல்வி நிறுவனமாக, இப்பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், ஒரு நாகரிகத்தின் நினைவுகள், ஞானம், அடையாளத்தை, மொழி சுமந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். அஸ்ஸாமி, தமிழ் மொழியில் உள்ள இலக்கியப் படைப்புகள் பரஸ்பரம் மொழிபெயர்க்கப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்த அவர், இவ்விரண்டு மாநிலங்களுக்கு இடையே, கல்வி, இலக்கியம் சார்ந்த பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இந்தியாவின் கலாச்சார ஒற்றுமை, அதன் மொழிசார்ந்த பன்முகத்தன்மையை மேலும் வளப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பிரம்மபுத்திரா படுகை, அழியும் நிலையில் உள்ள மொழிகள், பன்மொழித்தன்மை, மகளிரியல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, இந்திய அறிவுசார் அமைப்புகள் ஆகியவை குறித்து இப்பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை அவர் பாராட்டினார். பிரம்மபுத்திரா நதியை ஒரு சூழலியல், பொருளாதார, நாகரிக சக்தியாக விவரித்த அவர், பிராந்திய, தேசிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2307634)
வருகையாளர் எண்ணிக்கை : 10