பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் செப்டம்பர் 8 அன்று பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 11:51AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 2026 செப்டம்பர் 8 அன்று பயணம் மேற்கொள்கிறார். வதோதராவில் நண்பகல் 12 மணியளவில் ரூ.35,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முடிவுற்றப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில், அவர் உரையாற்றவும் உள்ளார்.

தொடர்ந்து, மாலை 5.45 மணி அளவில் மும்பையில் உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2026-ஐ தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

வதோதராவில் பிரதமர்

மேற்கு சிறப்பு சரக்கு போக்குவரத்து வழித்தடத்தின் மூன்று முக்கியப் பகுதிகளைப் பிரதமர் அர்ப்பணிக்கிறார். இவை, ரூ.20,700 கோடிக்கும் அதிகமான செலவில் வடிவமைக்கப்பட்ட 326 கிலோ மீட்டர் வழித்தட தூரத்தை உள்ளடக்கியதாகும். இதில், சனந்த் (வடக்கு) - மக்கர்புரா, நியூ அம்பர்கான்- நியூ சஃபாலே, சஃபேல் - ஜேஎன்பிடி ஆகியப் பகுதிகள் அடங்கும்.

இத்திட்டம் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்துடனான நேரடிப் போக்குவரத்து, ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகளின்  விரைவான போக்குவரத்தை எளிமைப்படுத்தும், தொழில்மையங்கள் -  துறைமுகங்களுக்கிடையேயான போக்குவரத்தை வலுப்படுத்தும், சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும், மும்பை ரயில்வே கட்டமைப்பில் நெரிசலைக் குறைக்க உதவும்.

நியூ சனந்த் (வடக்கு), நியூ மக்கர்புரா, நியூ அம்பர்கான், நியூ ஜேஎன்பிடி (மும்பை) ஆகிய பகுதிகளிலிருந்து சரக்குப் போக்குவரத்து ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அத்துடன், வதோதரா - தண்டா சாலை இடையே ஒரு புதிய  ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார், இது வதோதரா, சோட்டா உதய்பூர், அலிராஜ்பூர் மாவட்ட மக்களுக்குப் பயனளிக்கும்.

சோட்டா உதய்பூர் – தார் திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட ஜோபத் – தண்டா சாலை இடையேயான புதிய ரயில் வழித்தடத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

329 கிலோ மீட்டர் வழித்தடங்களை உள்ளடக்கிய ரூ.9,700 கோடிக்கு  அதிகமான செலவில் அமைக்கப்படவுள்ள மூன்று ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

குஜராத் அரசின் சுமார் ரூ.2,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கவுள்ளார்.

மும்பையில் பிரதமர்

உலகின் மிகப்பெரிய, வருடாந்திர நிதி தொழில்நுட்ப மாநாடுகளில் ஒன்றான உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2026-ஐ பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் 7-வது பதிப்பு 2026 செப்டம்பர் 8 முதல் 11 வரை மும்பையில் நடைபெறுகிறது. 2020-ம் ஆண்டு முதல் உலகளாவிய ஃபின்டெக் திருவிழா ஒரு சர்வதேச சிந்தனைத் தளமாக உருவாகியுள்ளது. இதில், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறையாளர்கள், மத்திய வங்கிகள், நிதி அமைப்புகள், ஃபின்டெக், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், இதர உலகளாவிய சம்பந்தப்பட்ட துறையினரை ஒருங்கிணைத்து எதிர்கால நிதிச்சூழலை வடிவமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307319&reg=3&lang=1

***

TV/IR/PS/SM  


(வெளியீட்டு அடையாள எண்: 2307425) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Kannada , Malayalam