குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 3:09PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (செப்டம்பர் 5, 2026) ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், நாடு முழுவதிலுமிருந்து வந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள சம வாய்ப்பு எனும் லட்சியத்தை நனவாக்குவதற்கு கல்வியே மிகவும் பயனுள்ள வழி என்று கூறினார். தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மிகக் குறைவாக இருப்பது, ஆசிரியர்களின் முயற்சிகளாலேயே சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தேசிய வெற்றிக்குக் காரணமான அனைத்து ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார்.
பள்ளிக் கல்வி, கல்வி முறையின் அடித்தளமாக அமைகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். அறிவையும் திறன்களையும் எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் என்றாலும், குழந்தைப் பருவத்தில் நன்னடத்தைப் பாடங்களைக் கற்பிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் தெரிவித்தார். ஆரம்ப வகுப்புகளிலேயே குழந்தைகளின் அறிவுசார், உடல்சார், ஒழுக்கசார் நிலைகளில் விடாமுயற்சியுடன் கவனம் செலுத்துவதன் மூலம், நமது ஆசிரியர்கள் எதிர்காலத் தலைமுறையினரைச் சிறந்த மாணவர்களாகவும் கடமையுணர்வுள்ள குடிமக்களாகவும் உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
பல மாணவர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வருவதாகவும் பலர் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாகக் கல்வி கற்கும் மாணவர்களாக உள்ளதாகவும் அவர் கூறினார். சிலர் மிகுந்த திறமை பெற்றிருந்தும் தன்னம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மாணவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையை அளித்து, அவர்களை மேம்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியில் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியாவை உலகின் திறன் மையமாக நிலை நிறுவுவதும், ஒரு அறிவு வல்லரசாக மாற்றுவதும் நமது தேசிய முன்னுரிமைகளில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறி வரும் நிலையில், உலகத் தரம் வாய்ந்த கல்வி முறையின் மூலமாக மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306919®=48&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2306987)
வருகையாளர் எண்ணிக்கை : 5