இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பிரிக்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் விளையாட்டுக் கூட்டுப் பிரகடனம் ஏற்பு
प्रविष्टि तिथि:
23 AUG 2026 4:22PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் கூட்டம், கலந்துரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுப்பு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அத்துடன் பிரிக்ஸ் விளையாட்டுக் கூட்டுப் பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இக்கூட்டம் நிறைவடைந்தது.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டம், விளையாட்டு ஒத்துழைப்பில் முன்னுரிமைகள் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களையும் மூத்த விளையாட்டுப் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்தது. தமது தொடக்க உரையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரிக்ஸ் விளையாட்டுக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் பரிமாற்றங்கள், கூட்டுப் போட்டிகள், விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பகிர்வு என அனைத்திலும் வெறும் அறிவிப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஒத்துழைப்புகளுக்கான உண்மையான களங்களை உருவாக்க வேண்டும் என்று திரு மாண்டவியா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா தனது விளையாட்டுச் சூழலை முழுமையாக மாற்றியமைத்து வருவதாகவும், விளையாட்டுக் களம் முதல் சர்வதேச வெற்றி மேடை வரை அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். உடற்தகுதி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டின் மூலம் மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பது ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302494®=3&lang=1
***
SS/PLM/PD
(रिलीज़ आईडी: 2302546)
आगंतुक पटल : 10