நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாக்கு இறக்குமதியில் சாஃப்டா ஒப்பந்தச் சலுகைகள் பெரிய அளவில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதை டிஆர்ஐ கண்டுபிடித்துள்ளது

प्रविष्टि तिथि: 16 AUG 2026 10:51AM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ, ஒரு மாத கால புலனாய்வு சார்ந்த நடவடிக்கையின் மூலம், தென்கிழக்கு ஆசிய பாக்குகளை வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்யாகக் கூறி, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வந்த ஒரு பெரிய கட்டமைப்பின் நடவடிக்கைகளை முறியடித்துள்ளது. மேலும், தெற்காசிய தடையற்ற வர்த்தகப் பகுதிக்கான ஒப்பந்த விதிகளான சாஃப்டா-வின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள் மோசடியாகப் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் விசாரணையில் இதுவரை ரூ. 2,500 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கக் கூடும் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு பாக்கு இறக்குமதி செய்ய 100% அடிப்படை சுங்க வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், சாஃப்டா ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தகுதியான பாக்கு இறக்குமதிகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. வங்காளதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாக்குகள், பரிந்துரைக்கப்பட்ட மூல விதிகள் அடிப்படையிலான தகுதிகளைப் பூர்த்தி செய்தால், அவை சாஃப்டா ஒப்பந்தத்தின் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையவை.

டிஆர்ஐ-யால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளில், சில கும்பல்கள் பாக்கு இறக்குமதியில் சாஃப்டா ஒப்பந்தச் சலுகைகளை மிகப் பெரிய அளவில் மோசடியாகப் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட பாக்குகளை அவர்கள் இறக்குமதி செய்து, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பாக்குகளின் பூர்வீக நாடாக பங்களாதேஷ் என்று குறிப்பிட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டபோது அந்தப் பாக்குகள் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை என்பது உறுதிசெய்யப்பட்டன. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கருதப்படும் சுமார் ரூ.75 லட்சம் ரொக்கப் பணத்தையும், சுமார் 160 மெட்ரிக் டன் பாக்குகளை டிஆர்ஐ அதிகாரிகள் மீட்டுப் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், பூர்வீக நாட்டைத் திட்டமிட்டுத் தவறாக அறிவித்தல், சாஃப்டா சலுகைகளை மோசடியாகப் பெறுதல், சுங்க வருவாயைப் பெருமளவில் ஏமாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை டிஆர்ஐ திறம்பட முறியடித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300102&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300160) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam