பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஆற்றிய தமது உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 AUG 2026 4:21PM by PIB Chennai

நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது தில்லி செங்கோட்டையின் கொத்தத்திலிருந்து ஆற்றிய தமது உரையின் சில முக்கிய பகுதிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான பயணத்தை அவர் அதில் எடுத்துரைத்தார். தேசத்தின் முன்னேற்றம், உலகளாவிய நெருக்கடிகளின் போது காட்டிய மீள்திறன், தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைப் எடுத்துரைத்துள்ள அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்கத் தேவையான முக்கிய வளர்ச்சித் தூண்களான இளைஞர் மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, கூட்டு உறுதிப்பாடு ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ளார். தேசத்தின் பன்முக வளர்ச்சியை எடுத்துரைத்துள்ள அவர், ஏழு தூண்கள் எனும் சக்திவாய்ந்த கட்டமைப்பின் மூலம் நாடு புதிய உத்வேகத்தைப் பெற்று மேலும் உயரங்களை எட்டத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"செங்கோட்டையில் நினைவுகூரத்தக்க சுதந்திர தினம்! நமக்கு சுதந்திரம் அளித்தவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. அதே சமயம், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கும் நாளாகவும் இது அமைகிறது. ஒவ்வொரு சவாலையும் கடந்து உயரவும், ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தவும், தேசத்திற்காக நம்மை அர்ப்பணிக்கவும் மூவண்ணக் கொடி எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும்."

"2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதே எங்கள் இலக்கு. கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் முன்னேற்றத்தின் வேகமும் அளவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்துள்ளன. இன்று, இந்தியா புது நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேறி வருகிறது. இந்தியாவின் இந்த வேகத்தை உலகமும் கண்டு வருகிறது."

"வளர்ச்சியடைந்த பாரதம், தற்சார்பு பாரதமாகவும் இருக்க வேண்டும். நமது சொந்தத் திறன்களை வளர்ப்பதிலிருந்தே நீடித்த வலிமை பிறக்கிறது. 'இந்தியாவில் தயாரிப்போம்', 'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்' ஆகியவற்றின் பின்னணியில் உள்ள நம்பிக்கை இதுவே. இந்த மாற்றம் ஏற்கெனவே கண்கூடாகத் தெரிகிறது. இந்தியா ஒரு முழுமையான குறைக்கடத்தி உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. குறைக்கடத்தி ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. சிப் ஏற்றுமதி ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் இன்னும் பல ஆலைகளில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கனிமத் துறைகளிலும் நமது திறன்களை நாம் வலுப்படுத்தி வருகிறோம்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299882&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2300006) வருகையாளர் எண்ணிக்கை : 61