பாதுகாப்பு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி முக்கியமானது - சுதந்திர தின உரையில் பிரதமர்
प्रविष्टि तिथि:
15 AUG 2026 3:26PM by PIB Chennai
2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு முக்கியமானது என பிரதமர் திரு நரேந்திர மோடி தனது 2026 சுதந்திர தின உரையில் சுட்டிக் காட்டிய ஏழு முக்கிய தூண்களில் பாதுகாப்பு வலிமையும் ஒன்றாகும். இன்று (2026 ஆகஸ்ட் 15) தில்லியில் உள்ள செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பேசிய பிரதமர், பாதுகாப்புத் துறையில் தற்சார்பின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அடுத்த தலைமுறை பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை வழங்கும் உலகளாவிய நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
உலக நாடுகள் தங்களின் சொந்த நலன்களைப் பற்றி அதிகம் சிந்தித்து வரும் நிலையில், இந்தியா வெறுமனே உலகத்திற்கான ஒரு சந்தையாக இருந்துவிட முடியாது என்று அவர் கூறினார். நாம் ஆளில்லா விமானங்கள், ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கி, அதிவேக பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் தலைமை வகிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இணையப் பாதுகாப்பும் ஒரு பாதுகாப்புத் துறையாகும் எனவும் இதில் நாட்டின், உலகின் நன்மைக்காக இளைஞர்களின் திறன்களை நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
தற்போதைய காலங்களில் பாதுகாப்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், பாதுகாப்பு உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார். பாதுகாப்பு ஏற்றுமதி கிட்டத்தட்ட 50 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இந்திய ஆயுதங்கள் சுமார் 100 நாடுகளைச் சென்றடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299856®=3&lang=1
****
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2300003)
आगंतुक पटल : 9