உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, அனைத்துத் துறைகளிலும் முன்னணி நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் பயணத்தில் ஒரு மைல்கல் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 15 AUG 2026 2:01PM by PIB Chennai

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய, சுதேசி, செழிப்பு, தற்சார்புக்கான உறுதிப்பாடு நிறைந்த உரையானது, அனைத்துத் துறைகளிலும் இந்தியா ஒரு முன்னணி நாடாக உருவெடுக்கும் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது: 

"நாட்டின் 80-வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, ​​பிரதமர் திரு நரேந்திர மோடி, 'போதைப்பொருள் இல்லாத இந்தியா', 'பாதுகாப்பான இந்தியா' 'தேசமே முதன்மையானது' என்ற உணர்வுகளால் உந்தப்பட்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு விரிவான செயல்திட்டத்தை எடுத்துரைத்தார். குறைக்கடத்திகள், முக்கிய கனிமங்கள், எரிசக்தி, ரயில் போக்குவரத்து போன்ற துறைகளில் கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவும், அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு அடையவும் ஏழு முக்கிய தூண்கள் என்ற மந்திரத்தை முன்வைத்துள்ளார். இளைஞர்களின் ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்த, ஒரே ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி அளிக்கவும், இலவச இணையவழிப் பயிற்சிக்கான கட்டமைப்பை நிறுவவும், 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் திறமையாளர்கள் தேடல் இயக்கத்தைத் தொடங்கவும் முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடைவது, எட்டு புதிய குறைக்கடத்தி ஆலைகளை நிறுவுவது போன்ற லட்சிய இலக்குகளையும் அவர் நிர்ணயித்துள்ளார். உள்ளூர் உற்பத்தி, செழிப்பு, தன்னிறைவுக்கான உறுதியுடன் கூடிய பிரதமரின் இந்த உரை, அனைத்துத் துறைகளிலும் ஒரு முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும்."

 "சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆன நிலையில், சுதந்திர இயக்கத்தின் எழுச்சிமிக்க முழக்கமான 'வந்தே மாதரம்' இன்று முதன்முறையாக செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பாடப்பட்டது. இந்த வரலாற்றுத் தருணத்தைக் கண்டபோது எனக்கு மெய்சிலிர்த்தது மட்டுமல்லாமல், என் முழு உள்ளமும் பேரானந்தத்தால் நிரம்பியது."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299824&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300000) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , हिन्दी , English , Urdu , Gujarati