தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்கு ‘1601’ எண் வரிசையைப் பயன்படுத்த டிராய் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:28PM by PIB Chennai
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளைத் தவிர்த்து, பிற துறையைச் சேர்ந்த அமைப்புகள் மேற்கொள்ளும் சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்காக '1601' என்ற புதிய எண் வரிசையைப் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வங்கி மற்றும் அரசுச் சார்ந்த முக்கிய அழைப்புகளுக்கு '1600' எண் வரிசை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிதிச் சார்ந்த முக்கிய அழைப்புகளுடன் பிற துறைகளின் அழைப்புகள் கலப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் தனித்துவமான '1601' எண் வரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் (மின்சாரம், குடிநீர், எரிவாயு விநியோகம்) மற்றும் கூரியர், லாஜிஸ்டிக்ஸ் துறைகளைச் சேர்ந்த தகுதியான நிறுவனங்களுக்கு இந்த '1601' எண் வரிசை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு நேரடியாக ஒதுக்கப்படும். இடைத்தரகர்களுக்கோ அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்கோ இந்த எண்கள் வழங்கப்பட மாட்டாது.
சாதாரண 10 இலக்க எண்களைப் பயன்படுத்திப் பிரபல நிறுவனங்களின் பெயரில் நடைபெறும் போலியான மோசடி அழைப்புகளைக் கண்டறியவும், உண்மையான வணிக அழைப்புகளை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான நிறுவனங்களை இணைக்கும் பணியை 90 நாட்களுக்குள் நிறைவு செய்யுமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த எண்களை விளம்பர அழைப்புகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297141®=3&lang=1
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297328)
வருகையாளர் எண்ணிக்கை : 50