இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

வரும் 100 ஞாயிறுகள் போதையில்லா இந்தியாவை நோக்கிய 100 வலுவான படிகளாக இருக்கும் - பிரதமர்

பிரதமரின் தலைமையில் மக்கள் இயக்கமாக இது தொடங்குகிறது: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 02 AUG 2026 7:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.08.2026) வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நாடு தழுவிய மாபெரும் காணொலிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தக் கூட்டத்தை ஒரு ஆழமான தேசிய உறுதிப்பாடாக அவர் குறிப்பிட்டார். இன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒரு மகத்தான, முக்கியமான தீர்மானத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

 இந்த இயக்கம் தனிநபர் நலனைத் தாண்டி, குடும்பங்கள், சமூகம், ஒட்டுமொத்த தேசத்தின் பரந்த நலனுக்கானது என்று அவர் விளக்கினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கு, உடல்ரீதியாக ஆரோக்கியமான, மனரீதியாக வலிமையான இளம் தலைமுறை தேவை என்று அவர் கூறினார். மோசமான பழக்கவழக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட, மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட ஒரு இளம் தலைமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த லட்சக்கணக்கான இளைஞர்களைப் பாராட்டிய பிரதமர், தனிப்பட்ட முறையில் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, அதே சமயம் தங்கள் பள்ளிகள், கல்லூரிகள், சமூகங்களில் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை குறித்த செய்தியைத் தீவிரமாகப் பரப்புவதில் அவர்கள் காட்டிய உறுதியான அர்ப்பணிப்பைப் புகழ்ந்தார். இந்த இயக்கத்தின் லட்சியமிக்க 100 வார கால செயல்திட்டத்தை விவரித்த அவர், புதிய பங்கேற்பாளர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் வகையில், வரவிருக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலை, கலாச்சாரம், விளையாட்டு, தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக செயல்பாடுகள் இடம்பெறும் என்று கூறினார். வரவிருக்கும் 100 ஞாயிற்றுக்கிழமைகள், முற்றிலும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய 100 வலுவான படிகளாக நிச்சயமாக அமையும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிப்பட தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பயணத்தில், இந்த இயக்கம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களே உந்து சக்தி என அவர் குறிப்பிட்டார்.  செங்கோட்டையிலிருந்து போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரதமரின் அழைப்பை சுட்டிக்காட்டிய திரு மன்சுக் மாண்டவியா, 'மை பாரத்' திட்டமானது தொடர்ச்சியான இளைஞர் ஈடுபாட்டின் மூலம் இந்த இலக்கை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகக் கூறினார். இந்த இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரின் தலைமையில் மக்களின் பங்கேற்புடன் இது வெற்றி பெறும் என்று கூறினார். தூய்மை இந்தியா, உடல் திறன் இந்தியா உள்ளிட்ட பல தேசிய இயக்கங்கள் மாபெரும் வெற்றிகளாக மாறியதைப் போலவே இதுவும் வெற்றி பெறும் என்று மதிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, 26 மாநில ஆளுநர்கள், 11 மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் இந்த நாடு தழுவிய இயக்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில், பல்வேறு இடங்களில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இணைந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293495&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293518) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati , Kannada