பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சண்டிகரில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUL 2026 4:51PM by PIB Chennai

திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா ஜே.பி. நட்டா அவர்களே, அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, சக நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு பல பிரபலங்களையும், பழகிய முகங்களையும் இன்று நான் காண்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

இன்று உங்கள் மத்தியில் இருப்பது எனக்கு ஒரு தனித்துவமான மகிழ்ச்சியைத் தருகிறது.

நண்பர்களே,

சண்டிகர் வெறும் ஒரு நகரம் மட்டுமல்ல - அது இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு மாதிரியாக இருந்து வருகிறது. திட்டமிடப்பட்ட வளர்ச்சி, சிறந்த வாழ்வியல் முறை மற்றும் எளிதான வாழ்க்கை முறைக்கான அடையாளமாக சண்டிகர் அறியப்படுகிறது. மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்காகவும், அனைத்திற்கும் மேலாக சண்டி மாதா தேவியின் அருளுக்காகவும் இது போற்றப்படுகிறது. அதனால்தான் சண்டிகரின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாடு தனது நீதித்துறை அமைப்பில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததை நீங்கள் நினைவுகூரலாம். தண்டனையை மையமாகக் கொண்ட சட்டங்களுக்குப் பதிலாக, நீதியை மையமாகக் கொண்ட இந்திய நீதிச் சட்டக் கட்டமைப்பைத் தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வந்தோம். அந்த இந்திய நீதிச் சட்டத்தை அமல்படுத்தும் பணி இந்த சண்டிகரில் தான் தொடங்கப்பட்டது.

நண்பர்களே,

சமீபத்திய ஆண்டுகளில், சண்டிகரை அதிநவீன நகரமாக மாற்றுவதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம், ஸ்மார்ட் போக்குவரத்து நிர்வாகம், ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடம் மற்றும் டிஜிட்டல் ஆளுகை போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்காக ரூ.2,500 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்றுகூட, சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பல புதிய திட்டங்கள் இங்கு தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த நல்முயற்சிகளுக்காக சண்டிகரின் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இங்கு வருவதற்கு முன்பு, நான் ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்தேன். இதற்குப் பிறகு, பஞ்சாபின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜலந்தருக்குச் செல்ல இருக்கிறேன். இந்த இரண்டிற்கும் இடையே, இன்றைய சண்டிகர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏனெனில் சண்டிகர் நகரம் ஹரியானா, பஞ்சாப், இமாச்சலம் மற்றும் இந்த முழு பிராந்தியத்தையும் இணைக்கிறது. சண்டிகரின் வளர்ச்சி இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல், ஹரியானா, இமாச்சலம், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நன்மையளிக்கிறது. மருத்துவச் சேவைகளைப் பொறுத்தவரை, இந்த முழு பிராந்தியத்திற்கும் சண்டிகர் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.

நண்பர்களே,

நான் சண்டிகரில் வாழ்ந்த காலத்தில், அடிக்கடி பி.ஜி.ஐ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஏன் தெரியுமா? ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலம் அல்லது ஹரியானாவைச் சேர்ந்த நமது சகாக்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ இங்கு சிகிச்சைக்காக வருவார்கள்; அவர்களைச் சென்று பார்ப்பது எனக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. அதனால் தான், இந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு பி.ஜி.ஐ எவ்வளவு முக்கியமானது என்பதை நான் நன்கு அறிவேன்.

நண்பர்களே,

இன்று, சண்டிகர் பி.ஜி.ஐ-யில் உள்ள மேம்பட்ட மருத்துவ வசதிகள் மேலும் விரிவாக்கப்பட்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட நரம்பியல் மையம், மேம்படுத்தப்பட்ட தாய்-சேய் மையம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை லட்சக்கணக்கான மக்களுக்குச் சிறந்த சிகிச்சையை அளிக்கும். 2015ம் ஆண்டு பி.ஜி.ஐ-யின் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொண்டது நினைவிருக்கிறது. இன்று மீண்டும் அங்கிருக்கும் பல பழைய சகாக்களை காணொளி வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 10 ஆண்டுகளில், பி.ஜி.ஐ-யின் திறன் பெருமளவில் விரிவடைந்துள்ளது. சண்டிகர் பி.ஜி.ஐ-யின் நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் இளம் மருத்துவர்களை நான் பாராட்டுவதோடு, அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும்போது, சுகாதாரம் எவ்வளவு முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நமது அரசு அமைந்ததும், தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தைத் தொடங்கினோம். கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன; இந்தியா திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற நாடாக மாறியது; பொது இடங்களில் தூய்மையைப் பேண பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன; மேலும் தூய்மையை நமது வாழ்வியலின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. நமது நகரங்களின் தூய்மை இந்தியா தரவரிசைகளும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும், மேலும் இதில் சிறப்பான பங்களிப்பை வழங்க சண்டிகர் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

நண்பர்களே,

சண்டிகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான திரு. இந்தர்ஜித் சிங் சித்து அவர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். அவர் "துடைப்ப போர்வீரர்" என்று அழைக்கப்படுகிறார். அவர் சண்டிகரில் தூய்மை பற்றிய ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களுக்கு ஊக்கமளித்தார். இதற்காக நமது அரசு அவருக்கு இந்த ஆண்டு 'பத்ம' விருது வழங்கி கௌரவித்தது.

நண்பர்களே,

தூய்மை என்பது ஒரே நாளில் முடிந்துவிடும் பணியல்ல - அது ஒரு வாழ்க்கை முறை. இன்றைய நிகழ்ச்சியோடு தூய்மை இணைக்கப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மையான வரவேற்பு முன்முயற்சியின் கீழ், சிறப்பு தூய்மைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைவர்களும் குடிமக்களும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதை சமூக ஊடகங்களில் கண்டேன். இது நாடு முழுவதும் ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது. இந்த நல்முயற்சிக்காக சண்டிகரின் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இத்தகைய தூய்மைப் பிரச்சாரங்கள் நாட்டில் பல நோய்கள் பரவாமல் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

நண்பர்களே,

ஒரு காலத்தில், இந்தியாவின் சுகாதாரத் துறையைக் கண்டு உலகமே கவலை தெரிவித்தது. ஒரு பெரிய பேரழிவு எதிர்பார்க்கப்படும்போதெல்லாம், இந்தியாவில் என்ன நடக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்பினர். கொரோனா பெருந்தொற்றின் போது, உலகளாவிய கவலையின் மையப் புள்ளியாக இந்தியா இருந்தது. ஆனால், நமது அரசு இந்தியாவின் திறனை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகத்தின் பார்வையையும் மாற்றியது. பெருந்தொற்று வந்தபோது, இந்தியா பிறரிடம் உதவி கேட்கும் நாடாக இருக்கவில்லை - மாறாக, உலக நாடுகளுக்கு உதவிகளை அனுப்பி வைக்கும் நாடாக இருந்தது. இன்று, தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்காகப் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். மருத்துவச் சுற்றுலாவின் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

நண்பர்களே,

இந்த மாற்றம் 12 ஆண்டுகால நேர்மையான முயற்சி மற்றும் சரியான கொள்கைகளின் முடிவாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு, நமது மக்கள் மருத்துவச் சேவைகள் இன்றி வாழக் கூடாது என்றும், குறைந்த விலையில் சிறந்த சிகிச்சை வசதிகளை அவர்கள் பெற வேண்டும் என்றும் நாங்கள் உறுதி பூண்டோம். கடந்த 12 ஆண்டுகளின் வெற்றி அந்த உறுதியின் பலனாகும். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பை அதிவேகமாக விரிவாக்கியுள்ளது. 2014 முதல், 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு சண்டிகருக்கு அருகிலும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை கட்டப்பட்டது. 2022ம் ஆண்டில், அதைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது.

நண்பர்களே,

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் முதன்மைச் சுகாதார வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்திய மருத்துவ காப்பீட்டு சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம்தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் பொது சுகாதார அலகுகள் போன்ற வசதிகளின் வலைப்பின்னல் நாடு தழுவிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று, நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளில் சுமார் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் முதன்மை சிகிச்சை வசதிகளுடன் 12 விதமான சுகாதாரத் தொகுப்புச் சேவைகளையும் வழங்குகின்றன. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பரிசோதனைகளை இங்கு லட்சக்கணக்கான மக்கள் செய்துகொண்டுள்ளனர்.

நண்பர்களே,

இந்தியாவை காசநோய் அற்ற நாடாக மாற்றவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக காசநோயற்ற இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பங்கேற்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது; உரிய நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகளுக்குச் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, காசநோய்க்கான சிகிச்சை ஒருங்கிணைப்பு 90 சதவீதத்தைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒரே தசாப்தத்தில் காசநோய் தொற்று 21 சதவீதம் குறைந்துள்ளது. இந்த முயற்சிகளின் மிகப்பெரிய பலன் ஏழைகளுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும், குறிப்பாக நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்குமே சென்று சேர்கிறது. வழக்கமாக, பெண்கள் குடும்பப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, நோய்களை அமைதியாகச் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்த தீவிர முயற்சிகள் அவர்களுக்குப் பரிசோதனைகளையும் பராமரிப்பையும் உறுதி செய்துள்ளன. இன்று பெருமளவிலான பெண்கள் காசநோயிலிருந்து விடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் மருத்துவச் சேவை என்பது இனி ஒரு சிலருக்கான சலுகை அல்ல - அது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாக மாறி வருகிறது.

நண்பர்களே,

சுகாதாரத் துறையில் அரசு செலுத்தும் கவனம் இந்தியாவின் இளைஞர்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது. இந்த மருத்துவக் கனவைத் தொடர்வது ஒரு காலத்தில் எவ்வளவு கடினமாக இருந்தது என்பது இளம் மருத்துவர்களுக்குத் தெரியும். மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் மிகக் குறைவாக இருந்ததால் வாய்ப்புகளும் அரிதாகவே இருந்தன. இந்த நிலையை நாங்கள் மாற்றினோம். இன்று மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவ இடங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன. இப்போது, சண்டிகர் பி.ஜி.ஐ-க்கும் எம்.பி.பி.எஸ் கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. விரைவில் இங்குச் சேர்க்கை தொடங்கும்; இதனால் இத்தகைய உயர்மட்ட நிறுவனத்தில் பயிலும் வாய்ப்பு திறமைமிக்க இளைஞர்களுக்குக் கிடைக்கும். நாட்டிற்கும் பெருமளவிலான சிறந்த மருத்துவர்கள் கிடைப்பார்கள்.

நண்பர்களே,

கல்வி, பொறியியல், மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த முதன்மை நிறுவனங்கள் ஒரே இடத்தில் இணைந்து அமைந்திருக்கும் ஒரு நகரம்தான் சண்டிகர். மிகச் சில நகரங்களுக்கே இத்தகைய பலம் உண்டு. வரும் காலத்தில், இந்த நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம், சுகாதாரம், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் புதுமைகளுக்கான முக்கிய மையங்களாக உருவெடுக்க முடியும். இன்று, கல்வி தொடர்பான பல முக்கியமான திட்டங்களும் இந்தப் பயணத்திற்கு ஒரு புதிய வேகத்தை அளித்து வருகின்றன. பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் குருக்ஷேத்ரா மாணவர் விடுதி மற்றும் உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. செக்டார்-46ல் உள்ள அரசுக் கல்லூரிக்கு ஒரு புதிய விடுதி தயார் செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர் விடுதிக்கும்  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு சிறந்த ஆய்வகங்களையும், பேராசிரியர்களையும் வழங்க வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். ஆராய்ச்சிச் சூழல் வலுவாக இருக்கும்போது, புதுமைகளும் வேகமெடுக்கும். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், மேம்பட்ட உற்பத்தி  மற்றும் டீப்-டெக் போன்ற துறைகளில் இந்தியா முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தத் திசையில் சண்டிகரின் நிறுவனங்களும், ஆசிரியர்களும், இளைஞர்களும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குமான வழிகாட்டி வரைபடமாகும். இந்தியாவில் முதன்முறையாக, உள்கட்டமைப்பானது ஒரு முழுமையான தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்றுகூட சண்டிகரில் பல இணைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 'ஐடி சிட்டி' முதல் குராலி வரையிலான 6 வழிப் பசுமைச் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையச் சாலையின் நெரிசலைக் குறைப்பதோடு, மொஹாலி மற்றும் கரார் வாசிகள் எளிதாகப் பயணிக்க உதவும். அம்பாலா - சண்டிகர் பசுமைப் பாதையின் பிஆர்-7 ஸ்பர்  திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் தொழில்துறையையும் வர்த்தகத்தையும் ஊக்குவிப்பதுடன், சண்டிகரில் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்.

நண்பர்களே,

பிராந்திய இணைப்பில் கவனம் செலுத்தும் வகையில், ஜலந்தரில் இன்று ரயில்வே திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன. இவை பஞ்சாப்பிற்கும் இந்த முழுப் பிராந்தியத்திற்கும் பயனளிக்கும். அதே நேரத்தில், ஜிந்த் முதல் சோனிபட் வரை, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தூய்மை எரிபொருள் ரயில் ஒரு மிகப்பெரிய தொடக்கமாகும். இந்த சாதனைக்காக உங்கள் அனைவருக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தப் பயணத்தில், எதிர்காலத் தொழில்நுட்பங்கள், எதிர்காலப் போக்குவரத்து மற்றும் எதிர்காலச் சுகாதாரச் சேவைகளில் கவனம் செலுத்தி - ஒரு நவீனச் சிந்தனையோடு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். தற்போதைய தலைமுறைக்கு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையினருக்கும் பலன் தரும் முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். காலப்போக்கில் மேலும் வலுவடையும் நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும். பா.ஜ.க - என்.டி.ஏ அரசு இந்தத் திசையில் அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டங்களுக்காக சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலம் மற்றும் இந்த முழுப் பிராந்தியத்து மக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

மிக்க நன்றி.

(Release ID: 2285777)

***

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2291905) வருகையாளர் எண்ணிக்கை : 29